பெங்களூரு: ஓடும் பஸ்களில் எதிர்பாராமல் தீப்பிடிப்பது குறித்து, பி.எம்.டி.சி.,யின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்ய தயாராகி வருகின்றனர்.பி.எம்.டி.சி., பஸ்கள், பெங்களூரு மக்களின் உயிர்நாடியாக உள்ளது. ஆனால் சமீப நாட்களாக பயணியரை சுமந்து செல்லும் போது, நடுரோட்டில் பஸ்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதனால் பயணியர் அச்சம் அடைகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு, 35க்கும் மேற்பட்ட பயணியரை சுமந்த பி.எம்.டி.சி., பஸ் ஒன்று, எம்.ஜி., சாலையின் அனில் கும்ப்ளே சதுக்கம் அருகில் சென்றபோது, திடீரென தீப்பிடித்தது. இதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணியரை கீழே இறக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அதன்பின் தீயை கட்டுப்படுத்த, ஓட்டுனரும், நடத்துனரும் முயற்சித்தும் முடியவில்லை. தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் வருவதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து கருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.பி.எம்.டி.சி.,யின் தொழில்நுட்ப குழுவினர், பஸ்சில் பொருத்தப்பட்ட பேட்டரியை பரிசோதித்தனர். பஸ்சை 'ஸ்டார்ட்' செய்யும்போது, பேட்டரியில் இருந்து மின்சாரம் சப்ளையாகும். இது சாதாரணமாக இருந்தால், அசம்பாவிதம் ஏற்படாது. ஆனால் திடீரென அதிகமான மின்சாரம் சப்ளை ஆனதால், அதில் வெப்பம் உற்பத்தியாகி நேரடியாக ஒயர்களில் உராய்ந்து தீப்பிடித்ததை கண்டுபிடித்தனர்.இது தொடர்பாக, ஆழமாக ஆய்வு செய்ய பி.எம்.டி.சி., கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டியும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்த அறிக்கையில், 'பஸ்சின் ஒயர்கள் சூடாகவில்லை. எந்த உதிரி பாகங்களும் சேதமடையவில்லை. ஆனால் பஸ்சை ஸ்டார்ட் செய்யும் போது, பேட்டரியில் அதிக மின்சாரம் சப்ளையாகி உள்ளது. அதிக மின்சாரம் சப்ளையாக, என்ன காரணம் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.கமிட்டி சிபாரிசுபடி, அனைத்து பஸ்களின் பேட்டரிகளை பரிசோதனை செய்ய, பி.எம்.டி.சி., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.