உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவுக்கு பா.ஜ., பங்களிப்பு என்ன? அண்ணாமலைக்கு காங்., - எம்.எல்.ஏ., சவால்

கர்நாடகாவுக்கு பா.ஜ., பங்களிப்பு என்ன? அண்ணாமலைக்கு காங்., - எம்.எல்.ஏ., சவால்

ஷிவமொகா: கர்நாடகாவுக்கு பா.ஜ., பங்களிப்பு என்ன என்று, ஒரு மேடையில் விவாதிக்க வரும்படி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சவால் விடுத்துள்ளார்.சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், ஷிவமொகாவில் நேற்று அளித்த பேட்டி:ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளேன். அவர் தைரியமான பெண். எந்த முடிவையும் தைரியமாக எடுக்கும் ஆற்றல் கொண்டவர். இந்த மண்ணின் மகளும் கூட. ராஜ்குமார் குடும்பத்தின் மருமகள்.நான் அந்த குடும்பத்தின் தீவிர ரசிகன். ஷிவமொகா பா.ஜ., -- எம்.பி., ராகவேந்திரா, தொகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் இம்முறை கீதாவை வெற்றி பெற வைக்க வேண்டும்.கீதாவின் தம்பியான அமைச்சர் மது பங்காரப்பா, கல்வி அமைச்சராக உள்ளார். குழந்தைகள் எதிர்காலத்திற்கு, பல திட்டம் அவரிடம் உள்ளது. ஷிவமொகாவுக்கு பங்காரப்பா குடும்பத்தினர் அளித்த பங்களிப்பு அபாரமானது. ஷிவமொகாவையும், பங்காரப்பா குடும்பத்தையும் பிரித்து பார்க்க முடியாது. கர்நாடகாவின் வளர்ச்சிக்காக எம்.பி.,க்கள், லோக்சபாவில் பேச வேண்டும். ஆனால் பா.ஜ., - எம்.பி.,க்கள் ஏதாவது பேசினரா?

23 இடங்களில் வெற்றி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு, பா.ஜ.,வினர் பெயரை மாற்றி, தங்களது திட்டம் என்று பொய் கூறுகின்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்னர் தான், கழிப்பறை கட்டப்பட்டது என்கின்றனர். ஏன் அதற்கு முன்பு கழிப்பறைகள் கட்டப்படவில்லையா?கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரிசி கொடுக்க, முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்தார். இதனால் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்ற பயத்தில், பா.ஜ., - எம்.பி.,க்கள் அரிசி கொடுக்க விடாமல் செய்தனர்.அரிசி கொடுப்பதில் கூட அரசியல் செய்தவர்கள் தான் பா.ஜ., - எம்.பி.,க்கள். அவர்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடைக்கிறது. இதன்மூலம் பல குடும்பங்கள் பயனடைகின்றன.கர்நாடகாவில் காங்கிரஸ் 23 தொகுதிகளில் வெற்றி பெறும். இது பா.ஜ.,வுக்கே தெரியும். அவர்கள் நடத்திய சர்வேயிலும், அந்த முடிவுகள் தான் வந்துள்ளது.கர்நாடகாவுக்கு காங்கிரஸ் பங்களிப்பு என்ன என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேட்டு உள்ளார். பா.ஜ.,வின் பங்களிப்பு என்ன என்று, ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க அவர் தயாரா? அண்ணாமலையும் கஷ்டப்பட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவரும் இளைஞர். அவரை நான் மதிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை