நாகமங்களா கலவர பின்னணியில் யார்? பா.ஜ., சத்ய சோதனை கமிட்டி ஆய்வு!
மாண்டியா,: நாகமங்களாவில் கலவரம் நடந்த பகுதிகளில், பா.ஜ.,வின் சத்ய சோதனை கமிட்டி நேற்று ஆய்வு நடத்தியது. 'உண்மை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தின் பின்னணியில் இருக்கும், கண்ணுக்கு தெரியாதவர்களை கண்டுபிடிக்க வேண்டும்,' என்று குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில், இம்மாதம் 11ம் தேதி, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. அப்போது, மர்ம நபர்கள் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், வாகனங்களுக்கு பெட்ரோல் குண்டுகள் வீசி, தீ வைத்து எரிக்கப்பட்டதால், கலவரமாக மாறியது. இதில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த இருவர் பங்கேற்றது தெரிய வந்தது. உண்மை தன்மை
இந்நிலையில், கலவரம் ஏற்பட்டதற்கான உண்மை தன்மையை கண்டறிவதற்காக, பா.ஜ., சார்பில், மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா தலைமையில், சத்ய சோதனை கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி, கலவரம் ஏற்பட்ட நாகமங்களாவில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். கடைகளின் உரிமையாளர்கள், பொது மக்களிடம் ஆலோசனை நடத்தினர்.பின், அஸ்வத் நாராயணா கூறியதாவது:நாகமங்களா கலவரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்; உண்மை என்ன என்பது தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தின் பின்னணியில் இருக்கும், கண்ணுக்கு தெரியாதவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நோக்கம் என்ன?
இதை அரசுக்கு தெரியப்படுத்தவே, சத்ய சோதனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் கேரள நபர்கள் எப்படி பங்கேற்றனர்; அவர்களின் நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஆட்சி நிர்வகிப்பில், காங்கிரஸ் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. விநாயகர் சிலைகளையே காங்கிரஸ் அரசு கைது செய்தது. இத்தகைய மன நிலை கொண்டவர்களால், மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சத்ய சோதனை கமிட்டி, அறிக்கை தயாரித்து, மாநில தலைவர் விஜயேந்திராவிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு கோஷம்?
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று கூறியதாவது:நாகமங்களா கலவரம் நடந்த போது, மூன்று மர்ம நபர்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற ஆதரவு கோஷம் எழுப்பினர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த மத கலவரத்தில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில், சிக்கமகளூரில் பைக்குகளில் பாலஸ்தீன கொடி பிடித்து வலம் வந்து சிலர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தாவணகெரே காந்திநகரில், ஹிந்து அமைப்பினர், காவி கொடி கட்டியவர்கள் மீது, குறிப்பிட்ட சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர்.இதை எல்லாம் பார்க்கும் போது, விநாயர் சதுர்த்தியை சிலர் டார்கெட் செய்துள்ளனர். இது போன்று, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வேளையிலும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. ஹிந்துக்கள் பண்டிகைகள், விழாக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு, இந்த சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதால், உள்ளூர் போலீசாரால் கண்டுபிடிப்பது முடியாத காரியம். எனவே உடனடியாக என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., கண்டனம்
கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்து பிரமுகர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக, மங்களூரில் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் பலர், நாகமங்களாவுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர்.ஆனால், வழியிலேயே பலரை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். இன்னும் சிலர் மாண்டியாவின் பாண்டவபுராவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் தங்கி இருந்தனர். இதையறிந்த போலீசார், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்திலும் நுழைந்து, பிரமுகர்களை கைது செய்தனர். இதை கண்டித்து, பாண்டவபுரா போலீஸ் நிலையம் முன், வெவ்வேறு ஹிந்து அமைப்பினர் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அங்கேயே அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நிலைமை மோசமடைந்ததை அறிந்த மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதண்டி, சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்ததற்கு, பா.ஜ., தலைவர்கள் விஜயேந்திரா, அசோக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'நாங்கள் கோவில் போன்று வழிபடும் புனித தலத்துக்குள் போலீசார் புகுந்ததை கண்டிக்கிறோம்' என தெரிவித்துள்ளனர்.