மூணாறு:இடுக்கி லோக்சபா தொகுதியில் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மூன்று பேரை பொறுப்பில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மு.க., தலைமை இறுதி நேரத்தில் 'பல்டி' அடித்துள்ளது.'இண்டியா' கூட்டணியில் காங்., -- தி.மு.க., கம்யூனிஸ்டுகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இருப்பினும் கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் எதிரும், புதிருமாகஉள்ளன. இந்நிலையில் இடுக்கி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வினர், இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஜோய்ஸ் ஜார்ஜ்க்கு ஆதரவு தெரிவித்து, தொகுதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்துடன் பதாகைகள் வைத்து, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.அச்செயல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., கேரளாவில் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்திருக்க வேண்டும் என விமர்சனம் எழுந்தது.இதற்கிடையே, இறுதி நேரத்தில் தி.மு.க., திடீரென 'பல்டி' அடித்தது. கட்சியின் தலைமை உத்தரவுப்படி இடுக்கி லோக்சபா தொகுதியில் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க., கேரள மாநில குழு பொறுப்பு உறுப்பினர் மோகன்தாஸ், இடுக்கி வடக்கு பகுதி பொது செயலர் கனி, தெற்கு பகுதி பொது செயலர் ஜனார்த்தன் ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, கேரள மாநில செயலர் முருகேசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ''கேரளாவில் தி.மு.க., யாருக்கும் ஆதரவு இல்லை. 'இண்டியா' கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு விருப்பப்படி ஓட்டளிக்கலாம்,'' என்றார்.இதனால், கட்சியினர் பெரும் குழப்பத்தில்உள்ளனர்.