உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி கடிதம் திருத்தப்படவில்லை வீடியோ வெளியிட்டு முதல்வர் விளக்கம்

மனைவி கடிதம் திருத்தப்படவில்லை வீடியோ வெளியிட்டு முதல்வர் விளக்கம்

பெங்களூரு : 'மூடாவில் வீட்டுமனை கேட்டு, என் மனைவி பார்வதி எழுதிய கடிதம், ஒயிட்னரால் திருத்தப்படவில்லை' என, முதல்வர் சித்தராமையா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவர், தனக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மூடாவுக்கு, வளர்ச்சிப் பணிகள் செய்ய கொடுத்தார். அதற்கு பதிலாக அவருக்கு மைசூரின் முக்கிய இடமான விஜயநகரில் 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.முதல்வர் சித்தராமையா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவிக்கு மனைகள் வாங்கிக் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சித்தராமையாவிடம் விசாரிக்க கவர்னரும் உத்தரவிட்டுள்ளார்.

பெரும் குற்றம்

இதற்கிடையில், மாற்று நிலம் கேட்டு மூடாவுக்கு, பார்வதி எழுதிய கடிதத்தில் சில வரிகள் ஒயிட்னரால் அடிக்கப்பட்டு, அதன் மேல் 'டிக்' போடப்பட்டு இருந்தது.மூடா முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த பின், அந்த கடிதத்தில் ஒயிட்னரால் திருத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மீண்டும் குற்றஞ்சாட்டின.இந்நிலையில், மூடாவுக்கு தன் மனைவி எழுதிய கடிதத்தை புகைப்படம் எடுத்து, அதை வீடியோவாக, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் சித்தராமையா நேற்று வெளியிட்டார்.வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது: எங்கள் குடும்ப நிலத்திற்கு மாற்று மனை வழங்கக் கோரி, என் மனைவி அளித்த கடிதத்தில் நான்கு, ஐந்து வார்த்தைகள் மீது ஒயிட்னரால் கோடு போடப்பட்டு இருப்பது பெரும் குற்றம் என்று தொண்டை வலிக்க கத்தும், பா.ஜ., -- ம.ஜ.த., தலைவர்களே.உங்களின் வெறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு இந்த வீடியோவை சரியாக பாருங்கள். ஒயிட்னரால் கோடு போடப்பட்ட இடத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று.

அதிபுத்திசாலிகள்

'மூடாவால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக தேவனுார் 3ம் ஸ்டேஜ் அல்லது மூடாவால் உருவாக்கப்படும் புதிய லே- - அவுட்டில் இடம் கொடுங்கள்' என்று, என் மனைவி எழுதியுள்ளார். இது தொடர்பாக, கூடுதலாக சில வரிகள் தேவையின்றி எழுதியதால், அந்த வரிகள் மீது ஒயிட்னரால் அடித்துள்ளார்.'எனக்கு விஜயநகரில் தான் மனை வேண்டும்' என, அவர் குறிப்பிடவில்லை. 'ஒயிட்னர் போட்டு கரும்புள்ளியை துடைக்க முடியாது' என்று கூறியவர்கள், இப்போது என்ன சொல்ல போகின்றனர்? கண்ணாடி முன் நின்று கண்ணீர் வடிக்கும் சில அதிபுத்திசாலிகள், என்னையும், என் குடும்பத்தினரையும் புனையப்பட்ட கட்டுக்கதைகள் மூலம் சித்தரிக்கின்றனர்.உண்மை வெளியாக கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனால் இறுதியில் வெற்றி உண்மைக்கு தான்.இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை