ரூ.4.95 லட்சம் மோசடி செய்த பெண் கைது
பாலக்காடு; பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என, வாக்குறுதி அளித்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி கரயங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சப்வான். இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து, தன்னை ஒரு பெண் ஏமாற்றி பணம் பறித்ததாக வடக்கஞ்சேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் பென்னி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கோதமங்கலம் அய்யங்காவு பகுதியைச் சேர்ந்த அனுபமா, 36, என்பவர் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, நேற்று கைது செய்தனர். ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இன்ஸ்பெக்டர் பென்னி கூறுகையில், ''2024 செப்., முதல் டிச., மாதம் வரை, பல்வேறு நாட்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டலாம் என வாக்குறுதி அளித்து, முகமது சப்வானிடம் இருந்து 4.95 லட்சம் ரூபாயை அனுபமா பறித்துள்ளது விசாரணையில் தெரிந்தது. இதுபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் அவர் பண மோசடி செய்துள்ளார்,'' என்றார்.