உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பா நேரில் சந்தித்து அழைத்தும் மோடி கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.,

எடியூரப்பா நேரில் சந்தித்து அழைத்தும் மோடி கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.,

மைசூரு : சாம்ராஜ் நகர் தொகுதியின் முக்கிய புள்ளியான பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத்தை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சந்தித்து சமாதானப்படுத்தினார். ஆனாலும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் சீனிவாச பிரசாத்பங்கேற்கவில்லை.லோக்சபா தேர்தலில் சாம்ராஜ் நகரில் தனது மருமகன் தீரஜ் பிரசாத்துக்கு, தற்போதைய பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு தரப்படவில்லை. இதனால், சீனிவாச பிரசாத் அதிருப்தியில் இருந்தார்.இதனால், அவரை காங்கிரசுக்கு ஆதரவளிக்க வைக்க, முதல்வர் சித்தராமையா பிளான் செய்தார். தனது நீண்ட கால நண்பரை எட்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் மைசூரில் சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது, சாம்ராஜ் நகர் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொண்டார்.இந்த சந்திப்புக்கு பின், 'நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. சாம்ராஜ் நகரில் காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியின் மைசூரு பொதுக்கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை' என வருத்தத்துடன் சீனிவாச பிரசாத் கூறியிருந்தார்.இதையறிந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்று மைசூரில் சீனிவாச பிரசாத் வீட்டுக்கு சென்றார். இருவரும் மனம் விட்டு பேசினர். பின், எடியூரப்பா கூறுகையில், ''மூத்த எம்.பி.,யான சீனிவாச பிரசாத் மீது, மோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார். மோடி கூட்டத்துக்கு வர, அவர் சம்மதம் தெரிவித்துள்ளதற்கு, என்றென்றும் கடமை பட்டுள்ளேன். பிரதமரை சந்திக்க ஐந்து நிமிடம் நேரம் கேட்டுள்ளோம்,'' என்றார்.சீனிவாச பிரசாத் கூறுகையில்,''எடியூரப்பா வீடு தேடி வந்து அழைப்பு விடுத்தார். வர முடியாது என எப்படி கூற முடியும். வீட்டிற்கு வருவோரை மரியாதையுடன் வரவேற்பது நமது கடமை,'' என்றார்.அவரது மருமகனான முன்னாள் எம்.எல்.ஏ., ஹர்ஷவர்த்தன் கூறுகையில், ''என் மாமனாரின் உடல்நிலை சரியில்லை. ஒரு வாரத்துக்கு முன், காலில் காயம் ஏற்பட்டது. அதிகமாக நடக்கவோ, உட்காரவோ முடியாது.''ஒரு வாரத்துக்கு முன் மைசூரு மாவட்ட பா.ஜ., தலைவர் மஹாதேவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., நிரஞ்சன் அழைப்பு விடுத்தனர். தற்போதைய சூழலில் அவரால் வர இயலாது என்று கூறினேன். இதை சிலர், தங்கள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்,'' என்றார்.நேற்று நடந்த மோடி பிரசார கூட்டத்தில், சீனிவாச பிரசாத் பங்கேற்கவில்லை.பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத்தை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார். இடம்: மைசூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்