கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் மோசடி வாயிலாக பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்து, ஏராளமான போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவது தொடர்பாக, அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, 1996 முதல் பதிவு செய்த 1.10 லட்சம் டாக்டர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க, மாநில பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்த செப்டம்பரில், போலி டாக்டர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது குறித்து, தனியார் மருத்துவமனைகள் சங்கம், மாநில சுகாதாரத் துறையிடம் புகார் அளித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், பீஹார் மருத்துவக் கவுன்சில் பெயரில் போலி சான்றிதழ் பெற்று டாக்டர்கள் பெயரில் உலவிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சரிபார்க்க முடிவு
இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை நடத்திய கணக்கெடுப்பில், தகுதி யற்ற மற்றும் போலி கல்வி சான்றிதழ்களை கொண்ட நபர்கள் பலர் டாக்டர்களாக பதிவு செய்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு வங்க மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, டாக்டர்களின் பதிவுச் சான்றிதழ்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக டாக்டர்கள் பலர், தங்கள் சான்றிதழ்களை புதுப்பிக்காமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1996 முதல் பதிவு செய்துள்ள டாக்டர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ‘நோ யுவர் டாக்டர்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷரத்வத் முகர்ஜி கூறியுள்ளதாவது: கடந்த 1996ம் ஆண்டு முதல் பதிவு செய்த 1.10 லட்சம் டாக்டர்களின் கல்விச் சான்றிதழ்கள், பல்கலை பட்டங்கள் மற்றும் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங்
பீஹார், ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு, மேற்கு வங்கத்தில் பணியாற்றும் டாக்டர் களின் ஆவணங்களும் சரிபார்க்கப்படும். டாக்டர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், இரு வழிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முறை இருக்கும். டாக்டர்கள் நேரடியாக தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக ஆவணங்களை சரிபார்க்கப்படும். ஆய்வின் முடிவில், உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கியவர்கள், மருத்துவப் பணியை கைவிட்டவர்கள் ஆகியோரின் பெயர்கள் மருத்துவ கவுன்சில் பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். போலி டாக்டர்களின் ஊடுருவலை தடுப்பதுடன், உண்மையான டாக்டர்களின் பட்டியலை தயாரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த சரிபார்ப்பு இயக்கம் முடியும் வரை, தற்போதுள்ள டாக்டர்களின் பதிவுகள் அனைத்தும் வழக்கம் போல செல்லுபடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
திரிணமுல் காங்., எதிர்ப்பு!
ஆளும் பா.ஜ., அரசின் நடவடிக்கைக்கு, கடந்த, 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சவுகதா ராய் கூறியுள்ளதாவது:மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, வாக்காளர்களின் ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் கமிஷன், அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. திட்டமிட்டு பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டன. அதே பாணியில், தற்போதைய பா.ஜ., அரசு, டாக்டர்களுக்கு கடும் சிரமத்தை உருவாக்க இந்தப் பணியை துவக்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.