உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் 12 பணியாளர்கள் பத்திரமாக மீட்பு

நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் 12 பணியாளர்கள் பத்திரமாக மீட்பு

போர்பந்தர், டிச. 6-அரபி கடல் பகுதியில் நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 12 பணியாளர்களை, நம் கடலோர காவல்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, 'எம்.எஸ்.வி. - ஏ.ஐ., பிரான்பிர்' என்ற சரக்கு கப்பல், மேற்காசிய நாடான ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு கடந்த 2ம் தேதி புறப்பட்டது.

மீட்புப் பணி

இந்திய கடல் எல்லையைக் கடந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடற்பகுதியில் நேற்று முன்தினம் சென்ற போது கடல் சீற்றம் காரணமாக, கப்பல் கவிழ்ந்தது. இதுகுறித்த எச்சரிக்கை தகவல், மஹாராஷ்டிராவின் மும்பையில் செயல்படும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டது.அங்கிருந்த அதிகாரிகள், கப்பல் கவிழ்ந்தது தொடர்பான தகவலை குஜராத்தில் செயல்படும் கடலோர காவல்படைக்கு தெரிவித்தனர். இதையடுத்து, கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான சர்தாக் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டது.பாகிஸ்தான் கடற்பகுதியில் கப்பல் கவிழ்ந்ததால், அங்குள்ள கடற்சார் பாதுகாப்பு மையத்தின் உதவியும் கோரப்பட்டது. அங்கிருந்தும் கடற்படை விமானம் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தது. கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 12 பணியாளர்களும், அதிலிருந்து வெளியேறி ரப்பர் படகில் மிதந்தபடி தத்தளித்தனர். பாகிஸ்தான் கடல்சார் மீட்பு மைய உதவியுடன், அவர்கள் அனைவரும் நம் கடலோர காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, 12 பேரும் போர்பந்தர் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒத்துழைப்பு

இது தொடர்பாக கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மனிதாபிமான மீட்பு பணியானது, இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு மையத்தின் இடையே உள்ள நெருங்கிய ஒத்துழைப்பை காட்டுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை