உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா முழுவதும் ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடி; 120 துணை பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு

ஆந்திரா முழுவதும் ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடி; 120 துணை பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு

ஹைதராபாத்: ஆந்திராவில் ஒரே நேரத்தில் 120க்கும் மேற்பட்ட துணை பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.ஆந்திராவில், பல்வேறு பகுதிகளில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் நிலங்கள் பதிவு செய்யப்படும் போது பெரிய அளவிலான ஊழல்களும், சட்டவிரோத நடவடிக்கைகளும் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாநிலத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடியான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டனர்.அதன்படி, 12க்கும் மேற்பட்ட படைகளை அமைத்த அதிகாரிகள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணை பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டில் இறங்கினர். குறிப்பாக, என்டிஆர் மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.மேலும், ரேணிகுண்டா துணை பதிவாளர் ஆனந்த ரெட்டி மீது அதிக ஊழல் புகார்கள் வரப்பெற, அங்கும் அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். அங்கு சொத்துகளை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்களின் விவரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரமாக கொண்டு விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.ரெய்டு நடவடிக்கையானது, விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. அங்குள்ள 5 துணை பதிவாளர் அலுவலகங்களில் தனித்தனி குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் உள்ள துணை பதிவாளர் அலுவலகங்கள் சோதனை என்பதால், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து விவரங்கள், கணக்கில் வரவு வைக்கப்படாத ரொக்கம் அல்லது கைது நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டு உள்ளதாக என்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !