அமிர்தசரஸ்: தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், ஏற்கனவே 104 இந்தியர்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது; இரண்டாம் கட்டமாக 119 பேர் புறப்பட்ட நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக 157 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.அமெரிக்காவுக்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என்பதை பலர் தங்களுடைய வாழ்நாள் கனவாக வைத்துள்ளனர். இந்த வகையில், அமெரிக்காவுக்கு பலர் சென்று வேலை பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் ஏஜென்ட்களை நம்பி, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். ஆய்வு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பியூ' என்ற ஆய்வு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். பதவியேற்றதும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் உத்தரவு, அவரது முதல் கையெழுத்தாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா துவங்கியுள்ளது. அதன்படி இந்தியாவைச் சேர்ந்த 18,000 பேர் அடங்கிய பட்டியலை உறுதி செய்த அமெரிக்கா, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பு
இதன்படி, முதல் கட்டமாக, 104 பேர், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சி - 17 விமானம் வாயிலாக சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.திட்டமிட்டபடி, பிப்., 4ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், தாமதமாக 5ம் தேதி மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 104 பேர் இருந்தனர். அனைவரின் கைகளும், கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன; இது பெரும் சர்ச்சையானது. இது குறித்து பார்லிமென்டிலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இரண்டு விமானங்கள்
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 119 பேர் நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர். இவர்களில் 67 பேர் பஞ்சாபையும், 33 பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள். குஜராத்தைச் சேர்ந்த எட்டு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று, கோவா, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தலா இருவர், ஹிமாச்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதில், நான்கு பேர் பெண்கள். இவர்கள், 18 - 30 வயதுக்குட்பட்டவர்கள்.இந்நிலையில் மூன்றாம் கட்டமாக, 157 பேர் நாளை அமெரிக்காவில் இருந்து புறப்பட உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதன் பின், வாரத்துக்கு இரண்டு விமானங்கள் வாயிலாக, இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப் முதல்வர் கண்டனம்!
முதல் கட்டத்தைப் போலவே, இரண்டாம் கட்டத்திலும் இந்தியர்களை ஏற்றி வரும் அமெரிக்க விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. இதற்கு, ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, பஞ்சாபை அவமானப்படுத்துகிறது. ஏதோ பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கின்றனர். மாநிலத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து பா.ஜ., பொதுச்செயலர் தருண் சுக் கூறியுள்ளதாவது:தேவையற்ற அரசியலை செய்ய வேண்டாம். அப்பாவி இளைஞர்கள் எப்படி, யாரால் ஏமாற்றப்பட்டனர் என்பதை, பஞ்சாப் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமான முறையில் ஏன் அவர்கள் செல்ல வேண்டும்? அவர்களை ஏமாற்றியது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்களுடைய சொத்துக்களை விற்று சென்றுள்ள இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடியவர்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவும்.இவ்வாறு அவர் கூறினார்.