போபால்: மத்திய பிரதேசத்தில், திருமணம் முடிந்து 16 ஆண்டுகளாக பெற்றோருடன் தொடர்பின்றி, மாமனார் - மாமியாரால் கொடுமைக்குள்ளான பெண்ணை ஆபத்தான நிலையில் போலீசார் மீட்டனர்.மத்திய பிரதேசத்தின் நர்சிங்புர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிஷண்லால் சாஹு, 75; இவர், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.உடல்நல பாதிப்பு
அதன் விபரம்:
என் மகள் ராணு சாஹுவுக்கு, 2006ல் திருமணம் நடந்தது. ஜஹாங்கிராபாத் என்ற இடத்தில் கணவர் மற்றும் மாமனார் - மாமியாருடன் வசிக்கிறார். இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.என் மகள், கடந்த 2008 முதல் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. பலமுறை அவரது வீட்டுக்கு சென்றும் சந்திக்க முடியவில்லை. ஆனால், என் மகள் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் வாயிலாக தகவல் கேட்டறிந்து வந்தேன்.இப்போது, என் மகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பிள்ளைகள் அங்கிருந்து வேறு இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. என் மகளை உயிருடன் மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.விசாரணை
இதையடுத்து, ஜஹாங்கிராபாத் சென்ற மகளிர் போலீசார், ராணு குறித்து அவரது மாமியார் - மாமனாரிடம் விசாரித்தனர். அவர் வீட்டின் இரண்டாவது மாடியில் இருப்பதாக தெரிவித்தனர்.அங்கு சென்று பார்த்தபோது, கடுமையான உடல்நிலை பாதிப்புடன் அவர் படுக்கையில் கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பேசக்கூட தெம்பு இல்லாத நிலையில் அரை மயக்க நிலையில் கிடந்தார். அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மாமனார் - மாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது.அந்த பெண், 16 ஆண்டுகளாக எதற்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டார் என்ற தகவல், அந்த பெண் உடல்நிலை தேறியபின் தெரியவரும் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.