கனமழையால் பள்ளி வளாகத்தில் சிக்கி தவித்த 162 மாணவர்கள் மீட்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பெய்த கனமழையின் காரணமாக தனியார் பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக, அங்கு சிக்கி தவித்த 162 மாணவர்களை உள்ளூர் மக்களின் உதவியுடன் போலீசார் பத்திரமாக மீட்டனர்.ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பும் மாவட்டத்தின் பண்டர்சோலியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், பள்ளி வளாகத்தை நேற்று முன்தினம் மழைநீர் சூழ்ந்தது. மழையின் தீவிரம் அதிகரித்ததால், பள்ளியின் கீழ்தளம் முழுதும் மூழ்கியது. பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவரையும் பள்ளி கட்டடத்தின் மேல்தளத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில், 162 மாணவர்கள் சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு விரைந்தனர். மழையின் தீவிரம் அதிகரித்து காணப்பட்டதால், மாணவர்களை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு முழுதும் பள்ளி வளாகத்திலேயே சிக்கி தவித்தனர். இதற்கிடையே, அவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அப்படையினர் வரும்முன், உள்ளூர் மக்களின் உதவியுடன் அனைத்து மாணவர்களையும் கயிறு கட்டி போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.