கேதார்நாத்தில் இதுவரை 16.56 லட்சம் பக்தர்கள் தரிசனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்:உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 4,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது, 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு யாத்திரை துவங்கியது முதலே, உத்தரகண்டில் அதீத கனமழை, நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் குறுக்கிட்டன. இதனால், பக்தர்களின் பாதுகாப்புக்காக யாத்திரை அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வானிலை சீரான நிலையில், செப்., 10க்கு பின் சார்தாம் யாத்திரை மெல்ல வேகமெடுத்தது. இதன் காரணமாக கேதார்நாத்தில் மட்டும் இந்த ஆண்டு, 16.56 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 4,000 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர். தீபாவளி முடிந்து, வரும் 23ம் தேதியுடன் கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி யாத்திரை முடிவுக்கு வருகிறது. இதனால், அடுத்த இருவாரங்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்கோத்ரி கோவில் நடை, வரும் அக்., 22ம் தேதியும், பத்ரிநாத் கோவில் நடை, வரும் நவ., 25ம் தேதியும் அடைக்கப்படும். அதன்பின், இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை நிறைவடையும்.