உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் கடலில் மூழ்கி தமிழக மாணவியர் 2 பேர் பலி

கர்நாடகாவில் கடலில் மூழ்கி தமிழக மாணவியர் 2 பேர் பலி

உத்தரகன்னடா: கர்நாடக மாநிலம், கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்திருந்த, தமிழகத்தின் மருத்துவக் கல்லுாரி மாணவியர் இருவர், கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

ஆண்டு தேர்வு

தமிழகத்தின் திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர் ஆண்டு தேர்வு எழுதி முடித்தனர். தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாட, கர்நாடகாவின் உத்தரகன்னடாவுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர்.சென்னையின் டிராவல்ஸ் நிறுவனம் வாயிலாக சுற்றுலா ஏற்பாடு செய்தனர்.டிராவல்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த வாகனத்தில், 23 மாணவியர் குழுவாக இரண்டு நாட்களுக்கு முன் உத்தரகன்னடாவுக்கு சென்றனர். முதலில் தண்டேலி மற்றும் விபூதி நீர்வீழ்ச்சிக்குச் சென்றனர். அதன்பின் சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் நோக்கில், நேற்று முன் தினம் மாலை 5:30 மணியளவில், கோகர்ணாவின், ஜடாயு தீர்த்த கடற்கரைக்கு சென்றனர்.சில மாணவியர் கடலில் விளையாடிக் கொண்டே நீராடினர். அப்போது கனிமொழி, 23, ஹிந்துஜா, 23, அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

தோழியர்

அதைப் பார்த்த அப்பகுதியினர், மாணவியரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், மீட்புப்படையினர் உதவியுடன் மாணவியரை தேடத் துவங்கினர். பல மணி நேரம் தேடி, நேற்று காலை இருவரின் உடல்களை மீட்டனர்.இம்மாணவியரின் தோழியர் இருவர், கடற்கரையில் உள்ள பாறை மீது அமர்ந்திருந்தபோது, சறுக்கி விழுந்து, பாறை இடுக்கில் சிக்கி காயமடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, கோகர்ணா போலீசார் விசாரிக்கின்றனர். மாணவியருடன் வந்திருந்த தமிழகத்தின் சுற்றுலா வழிகாட்டி காந்தி, 23, டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வெற்றிச்செல்வன், 29, ஆகியோர் மீது வழக்குப் பதிவாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை