228 சைபர் குற்றவாளிகள் கைது: தெலுங்கானாவில் அதிரடி நடவடிக்கை
ஐதராபாத்: 2025 ஜனவரி முதல் ஜூலை வரையில் 228 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கானா சைபர் பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்களை தடுக்க, தெலுங்கானா சைபர் பாதுகாப்பு பணியகம் முனைப்பாக செயல்பட்டு, இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 27 பெண்கள் உட்பட 228 சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆன்லைன் மோசடி, நிதி மோசடிகள் மற்றும் சமூக ஊடக சம்பந்தப்பட்ட குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதில் மாநில அரசின் கடுமையான முயற்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.இது குறித்து தெலுங்கானா சைபர் பாதுகாப்பு பணியகம் இயக்குநர் ஷிகா கோயல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநிலத்தில் உள்ள போலி அழைப்பு மையங்கள், வேலை மோசடிகள், குழந்தை சுரண்டல் மற்றும் சைபர் அடிமைத்தன வளையங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டோம்.இதன்படி,மூன்று சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் ஆண்டின் முதல் பாதியில், சைபர் குற்றவழக்குகளில் 13 சதவீத குறைப்புக்கு வழிவகுத்தது.கைது செய்யப்பட்ட 228 நபர்களும் தெலுங்கானாவில் 189 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் 1,313 சைபர் கிரைம் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள். இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.92 கோடி.தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனியார் துறை ஊழியர்கள், மாணவர்கள், மென்பொருள் வல்லுநர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் (228 பேரில் 149 பேர்) 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.இவ்வாறு ஷிகா கோயல் அறிக்கையில் கூறியுள்ளார்