உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மருத்துவமனை திட்டங்கள் தாமதம் ஆளும்கட்சி - கவர்னர் மாளிகை மோதல்

24 மருத்துவமனை திட்டங்கள் தாமதம் ஆளும்கட்சி - கவர்னர் மாளிகை மோதல்

புதுடில்லி,:டில்லியில் 24 மருத்துவமனை திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு ஆம் ஆத்மி அரசும், துணை நிலை கவர்னர் அலுவலகமும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளன.ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி அறிக்கை மோதல் நடந்து வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கை:கடந்த 2020 ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமிருந்த நேரம். தலைநகர் பகுதியில் 20 லட்சம் கொரோனா நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அத்துடன் 80 ஆயிரம் பேருக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.அந்த நேரத்தில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான படுக்களையும் தற்காலிக மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது.அடுத்து புதிய மருத்துவமனைகளை ஏற்படுத்துவதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. பட்ஜெட் கட்டுப்பாடுகளை விட, மக்களின் ஆரோக்கியத்திற்கு மாநில அரசு முன்னுரிமை அளித்தது.மாநிலம் முழுதும் 24 மருத்துவமனைகள் புதிதாக கட்ட ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்தது. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒரே ஆண்டில் இந்த மருத்துவமனைகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அத்துடன் மேற்கண்ட மருத்துவமனைகளில் பணியிடங்களை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி துணைநிலை கவர்னர் அலுவலகத்திற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதம் மூலம் நினைவூட்டியிருந்தார்.ஆனால் துணைநிலை கவர்னர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆம் ஆத்மி அறிக்கைக்கு பதிலடியாக துணைநிலை கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:மாநில அரசு துவக்கிய 24 மருத்துவமனைகளில் இன்னும் ஒரு மருத்துவமனையின் பணி கூட நிறைவடையவில்லை. அத்துடன் மருத்துவமனை செயல்பாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5,000 கோடி ரூபாய் செலவாகும்.மருத்துவமனைகளுக்கான பணியிடங்களை உருவாக்குவது துணைநிலை கவர்னர் அலுவலக வேலை இல்லை. துணை நிலை கவர்னர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக, இந்த மருத்துவமனைகளுக்கான பணியிடங்களை உருவாக்கும் செயல்முறையைத் துவங்குவது சிறப்பாக இருக்கும்.பணியிடங்களை உருவாக்குவதில் மருத்துவ சேவைத் துறைக்கும் துணைநிலை கவர்னருக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை