ரூ.1 கோடி பரிசு அறிவித்து தேடப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை
நாராயண்பூர்:சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், 1 கோடி ரூபாய் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் இயக்க தலைவர் பசவராஜு என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.நக்சல் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ஆப்பரேஷன் பிளாக்பாரஸ்ட்' என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகள் சார்பில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி, மத்திய ரிசர்வ் படையினருடன் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து, அம்மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப்பகுதி அருகே பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதில், தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் கேசவ ராவ் எனப்படும் பசவராஜு, 68, சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்திருந்தன. தடை செய்யப்பட்ட இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவின் பொதுச்செயலராக பசவராஜ் இருந்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அமித் ஷா பாராட்டு
நக்சல்கள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு படையினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:நக்சல்களை ஒழிக்கும் போரில் இது ஒரு மைல்கல் சாதனை. நக்சல்களுக்கு எதிரான 30 ஆண்டு போரில், பொதுச்செயலர் பதவியில் இருந்த ஒருவர், நம் படைகளால் வீழ்த்தப்படுவது இதுவே முதன்முறை. நம் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். ஆப்பரேஷன் பிளாக் பாரஸ்ட் முடிவில் சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில், நக்சல்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 84 பேர் சரணடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
யார் அந்த பசவராஜு?
பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல் இயக்க தலைவர் பசவராஜு, ஆந்திராவைச் சேர்ந்தவர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஜியன்னாபேட்டையில் பிறந்தவர். இவர், வாரங்கலில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., படித்துள்ளார். விளையாட்டில் ஆர்வம் மிகுந்த பசவராஜு, கல்லுாரி காலங்களில் தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தார். இதே காலக்கட்டத்தில் கல்லுாரி தேர்தல்களில் இடதுசாரி ஆதரவாளராக இருந்தார். அப்போது ஏ.பி.வி.பி., அமைப்புடன் நடந்த மோதலில் ஒரு முறை கைதானார்.அதன்பின், 'மக்களுக்கான போர்' என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசவராஜு, பல்வேறு சதி செயல்களிலும் ஈடுபட்டார். அந்த இயக்கத்தின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தார். இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவுடன் மக்களுக்கான போர் இயக்கம் இணைந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்த இயக்கத்தின் பொதுச்செயலராக பசவராஜு செயல்பட்டார்.பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டங்களை வகுப்பது, நக்சல் இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்து பயிற்சிகள் அளிப்பது போன்றவற்றை மேற்கொண்டார். சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிப்பதில் வல்லவரான இவர், பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் அரங்கேற்றி உள்ளார்.பிரகாஷ், கிருஷ்ணா, உமேஷ் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட பசவராஜு, நாடு முழுதும் உள்ள பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மத்திய - மாநில அரசுகள் அறிவித்திருந்தன.