பள்ளி வேன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது : மூன்று குழந்தைகள் பலி: 21 பேர் மீட்பு
திருவனந்தபுரம் : பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேன், நிலைகுலைந்து பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில், மூன்று குழந்தைகள் பலியாயினர். வேனிலிருந்த, 21 குழந்தைகள் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு குழந்தைகள் ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே, கழக்கூட்டத்தில் ஜோதி நிலையம் என்ற பள்ளியிலிருந்து, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் பள்ளி முடிந்து, 30 குழந்தைகளுடன் பள்ளி வேன் புறப்பட்டது. அக்குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதிற்கும், 12க்கும் இடைப்பட்டவர்கள். வேனை விபின் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வேன் கடினங்குளம் என்ற பகுதியில் சாணாங்கரா பாலத்தில் செல்லும்போது சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது ஏறாமல் இருக்க, வேனை டிரைவர் திடீரென திருப்பினார். இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து, பார்வதி புத்தனாற்றுக்குள் பாய்ந்தது.
ஆற்றில் விழுந்த வேன் அதிர்ஷ்டவசமாக ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில், வேனின் பாரம் தாங்காமல் படகும், வேனும் நீருக்குள் மூழ்கியது. இதில் வேன் டிரைவர் உட்பட பள்ளி குழந்தைகள் நீரில் சிக்கினர்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்து, மீட்பு பணிகளில் இறங்கினர். வேன் டிரைவர் விபின் நீரில் நீந்தி கரை சேர்ந்தார். பொதுமக்களும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் சேர்ந்து, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த, 21 குழந்தைகளை மீட்டனர்.
அவர்கள் அனைவரும், அருகே உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தேவிகா, 10, கிருஷ்ணா, 5, அபிஜித், 9, ஆன்சி, 10, அகில், 13, சூரியகாயத்ரி, 12, பிளசன், 10, சீதள், 12 மற்றும் கலீனா ஸ்டீபன், 12 ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தேவிகா, சூரிய காயத்திரி ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்விபத்தில், ஆரோமல் எஸ். நாயர், அஸ்வின் மற்றும் கனிகா சந்தோஷ் ஆகிய மூன்று குழந்தைகள் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் யாராவது சிக்கி உள்ளனரா என, தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். அவர்களை குறித்து விசாரணை நடந்து வருகிறது. வேன் டிரைவர் அதிக வேகத்தில் வேனை ஓட்டிக் கொண்டு சென்றதால் தான், அவரது கட்டுப்பாட்டை இழந்து, வேன் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து அறிந்ததும், முதல்வர் உம்மன் சாண்டி, கல்வி அமைச்சர் அப்துரப்பு, வருவாய் அமைச்சர் திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி கரிக்குகத்தி பகுதியில், பள்ளி வேன் பார்வதி புத்தானாற்றில் விழுந்து, ஐந்து பிஞ்சு குழந்தைகளும், பள்ளி ஆயாவும் பலியாயினர் என்பதும், அவ்விபத்தும் வேனின் டிரைவர் அதிகவேகத்தில் ஓட்டிச் சென்றதால் தான் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.