மோசடி பெண் வீட்டில் 3 சொகுசு கார் பறிமுதல்
பெங்களூரு; காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடையில் மோசடி செய்த, ஐஸ்வர்யா வீட்டில் இருந்து மூன்று விலை உயர்ந்த கார்களை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.மாண்டியா, மலவள்ளியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, சந்திரா லே - அவுட்டில் வனிதா என்பவர் நகைக்கடையில் இருந்து, 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்தார். இந்த வழக்கில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிஷ் கைது செய்யப்பட்டனர்.பேட்ராயனபுரா ஏ.சி.பி., பரத் ரெட்டி வழக்கை விசாரிக்கிறார். ஐஸ்வர்யா வீட்டில் சோதனை நடத்த, நீதிமன்றத்தில் இருந்து அனுமதியும் பெற்று இருந்தனர். நேற்று முன்தினம் ஆர்.ஆர்.நகர், தலகட்டபுராவில் உள்ள ஐஸ்வர்யாவின் வீடுகளில், சோதனை நடத்தப்பட்டது. தலகட்டபுரா வீட்டில் இருந்து 29 கிலோ வெள்ளி பொருட்கள், 105 கிராம் தங்க நகைகள் சிக்கியது.ஆர்.ஆர்.நகர் வீட்டின் முன்பு நின்ற பி.எம்.டபுள்யு., ஆடி கியு7, பார்ச்சூனர் என, மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது இந்த கார்கள் சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வனிதா கடையில் இருந்து வாங்கிய, நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில், மாண்டியாவில் தனது சகோதரருக்கு சிமென்ட் தொழிற்சாலையை ஐஸ்வர்யா அமைத்து கொடுத்ததும் தெரிய வந்து உள்ளது.இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி, ஐஸ்வர்யா 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மாண்டியா மேற்கு போலீஸ் நிலையத்தில் ரவிகுமார் என்பவர் கடந்த 31ம் தேதி புகார் செய்தார். அந்த புகாரின்படி நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.'மத்திய அமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா, அவரது மகன் நிகில் ஆகியோரை எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் எல்லாம் ஒரே குடும்பத்தினர் போன்று பழகுகிறோம்' என்று, ரவிகுமாரிடம், ஐஸ்வர்யா கூறி உள்ளார். ரவிகுமார் அளித்த புகாரில், ஐஸ்வர்யா கூறியதை குறிப்பிட்டு உள்ளார்.