3 புதிய எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பதவியேற்பு
பெலகாவி: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நேற்று பதவியேற்று கொண்டனர்.கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நேற்று துவங்கியது. சமீபத்தில் நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்க சபாநாயகர் காதர் அழைப்பு விடுத்தார்.அதன்படி முதலில் பல்லாரி சண்டூரில் வெற்றி பெற்ற அன்னபூர்ணா துக்காராம் பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து ஷிகாவியின் யாசிர் அகமது கான் பதான், சென்னப்பட்டணாவின் யோகேஸ்வர் பதவியேற்றனர்.பதவி ஏற்றதும் சபாநாயகர் காதர் இருக்கைக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். பின், யாசிர் அகமது கான் பதான், எதிர் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, எதிர்க்கட்சி தலைவர் அசோக், எதிர்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் ஆகியோரிடம் கைகுலுக்கி ஆசி பெற்றார்.ஆனால், அன்னபூர்ணாவும், யோகேஸ்வரும் எதிர்க்கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்த பக்கத்தை திரும்பி கூட பார்க்காமல் சென்றனர். யோகேஸ்வரின் முதுகில் தட்டி கொடுத்து, துணை முதல்வர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார். மூன்று பேரும் பதவியேற்ற போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.