உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்

3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கியது.கர்நாடக சட்டசபையில் காலியாக இருக்கும், ராம்நகரின் சென்னப்பட்டணா, பல்லாரியின் சண்டூர், ஹாவேரியின் ஷிகாவி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கியது.ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் வேட்பாளர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை.முதல் நாளான நேற்று, சென்னப்பட்டணா, சண்டூர் தொகுதிகளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. ஷிகாவி தொகுதியில் சோஷலிஸ்ட் கட்சி(இந்தியா) சார்பில் காஜாமுகைதீன் குடகேரி, கர்நாடக ராஷ்டிர சமிதியின் ரவி கிருஷ்ணா ரெட்டி, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் தலவார் சிவகுமார் ஆகிய மூன்று பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களாக, கட்சிக்காக உழைக்கும் தலைவர்கள், தொண்டர்களுக்கு 'சீட்' கிடைக்காது என்று தெளிவாகி உள்ளது.சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் சிவகுமார் அல்லது அவரது தம்பி சுரேஷ், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக குமாரசாமியின் மகன் நிகில் ஆகியோர் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளராக எம்.பி., துக்காராமின் குடும்பத்தில், யாராவது ஒருவருக்கு சீட் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பா.ஜ.,வில் முன்னாள் எம்.பி., தேவேந்திரப்பாவின் குடும்பத்தில் ஒருவர், முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.ஹாவேரியில் பா.ஜ., சார்பில் பசவராஜ் பொம்மை மகன் பரத்துக்கு சீட் கிடைக்கலாம். காங்கிரசில் யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், 'கட்சிக்காக இரவு, பகல் உழைத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. 'பிரசாரத்திற்கு மட்டும் நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர்' என, ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை