உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா எம்.பி.,க்களாக 4 பேர் நியமனம்

ராஜ்யசபா எம்.பி.,க்களாக 4 பேர் நியமனம்

புதுடில்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு வழக்கறிஞர் உஜ்வல் நிஹாம், வெளியுறவு முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சதானந்தன் மாஸ்டர், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய நான்கு பேரை, ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

மீனாட்சி ஜெயின்

மீனாட்சி ஜெயின், வரலாற்று ஆய்வாளர். இவர், டில்லி கர்கி கல்லுாரியின் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2014ல், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் உறுப்பினராக, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். கல்வி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்றுள்ள இவர், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக, நம் நாட்டின் வரலாறு, நாகரிக தொன்மை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன.உஜ்வல் நிஹாம்சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிஹாம், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு எதிராக மஹாராஷ்டிரா சார்பில் ஆஜரானவர். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட உஜ்வல் நிஹாம் தோல்வியை தழுவினார். முன்னதாக, 2016ல் இவருக்கு, மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.சதானந்தன் மாஸ்டர்கேரளாவைச் சேர்ந்த இவர், ஆசிரியராக பணியை துவக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்தார். அதன் கொள்கைகள் பிடிக்காததால், 1984ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நோக்குடன், 1994ல், சதானந்தன் மாஸ்டரின் இரு கால்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களால் வெட்டப்பட்டன. செயற்கை கால்களுடன் வலம் வரும் இவர், ஆசிரியராகவும், சமூகத் தொண்டராகவும் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா

இந்திய வெளியுறவு அதிகாரியாக 1984ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷிரிங்லா, 2020 முதல் 2022 வரை வெளியுறவு செயலராக பணியாற்றினார். அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் துாதராகவும் இருந்தார். 2019ல் அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியின் போது,பிரதமர் மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். 2023ல், 'ஜி- - 20' மாநாட்டை இந்தியா நடத்தியபோது தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றினார்.https://x.com/dinamalarweb/status/1944582054097924527

2026ல் 75 பேர் ஓய்வு

ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில், 75 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவகவுடா பதவிக்காலம், 2026 ஜூன் 25ல் முடிகிறது.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, பி.எல்.வர்மா பதவிக்காலம் நவ., 25ல் நிறைவடைகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பதவிக்காலம், ஜூன் 21ல் நிறைவடைய உள்ளது.தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவு தலைவர் சரத் பவார், அக்கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்திய குடியரசு கட்சித் தலைவரான, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.தமிழகத்தில், தி.மு.க.,வின் திருச்சி சிவா, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை உட்பட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலமும், ஏப்ரலில் நிறைவடைகின்றன. நியமன எம்.பி.,யாக உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம், மார்ச்சில் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை