உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதிய தம்பதியை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி வங்கி பெண் அதிகாரி, கணவர் உட்பட 4 பேர் கைது

முதிய தம்பதியை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி வங்கி பெண் அதிகாரி, கணவர் உட்பட 4 பேர் கைது

கிரிநகர்: பெங்களூரை சேர்ந்த வயதான தம்பதியின் 50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தனியார் வங்கி துணை மேலாளர், அவரது கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு கிரி நகரில், 'இண்டஸ்இண்ட்' வங்கியின் கிளை உள்ளது. இங்கு துணை மேலாளர் மேகனா. கடந்த மாதம் இவரது வங்கிக்கு வந்த மூத்த தம்பதி, தங்கள் இருவர் பெயரிலும், ஜாயின்ட் வங்கி கணக்கு திறக்க வேண்டும் என்று மேகனாவிடம் தெரிவித்துள்ளனர்.

குடும்ப விஷயம்

அடிக்கடி வங்கிக்கு வந்து சென்றதில், இத்தம்பதிக்கும், மேகனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தங்கள் வீட்டு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். அப்போது சாம்ராஜ்பேட்டையில் தங்களுக்கு சொந்தமான வீட்டை விற்றதில், 1 கோடி ரூபாய் வந்ததாகவும், அதற்காகவே இங்கு ஜாயின்ட் வங்கி கணக்கு திறந்ததாகவும் தம்பதி தெரிவித்தனர்.இதையறிந்த மேகனா, இந்த பணத்தை அபகரிக்க முடிவு செய்தார். வங்கிக்கு மூதாட்டி மட்டும் வந்த போது, 'உங்களின் இரண்டு பாண்டு பத்திரங்கள் காலாவதியாகி விட்டன. எனவே, அதை புதுப்பிக்கவும், புதிய பாண்டு பத்திரங்கள் வாங்கவும் காசோலை தேவைப்படுகிறது' என்று கூறியுள்ளார்.அடுத்த இரண்டு நாட்களுக்கு பின், மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற மேகனா, பாண்டு வாங்குவதற்காக என கூறி, சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கி உள்ளார். அதனுடன், மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்கான 'ஆர்.டி.ஜி.எஸ்.,' பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி உள்ளார்.சில நாட்களுக்கு பின், பெற்றோரின் மொபைல் போனில் வங்கி கணக்கை, அவரது மகன் செக் செய்தபோது, பிப்., 13ம் தேதி, 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசில் புகார்

இது தொடர்பாக பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மட்டும் வங்கிக்கு சென்று, மேகனாவிடம் கேட்டார். அதற்கு மேகனா, 'நீங்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு, பணம் மாற்றப்பட்டு உள்ளது' என்று கூறி தப்பிக்க முயற்சித்தார்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி, கிரிநகர் போலீசில் மேகனா மீது புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், முதிய தம்பதியின் பணத்தை, தன் வங்கி கணக்கிற்கு மாற்றியதை மேகனா ஒப்புக் கொண்டார்.மேகனா, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சிவபிரசாத், நண்பர்கள் வரதராஜு, அன்வர் கோஷ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை