உ.பி.,யில் மதமாற்றத்தில் ஈடுபட்ட மதரசா மதகுரு உட்பட 4 பேர் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பரேலி: உத்தர பிரதேசத்தில், மதமாற்றத்தில் ஈடுபட்ட மதரசா பள்ளி மதகுரு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹிந்துக்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, மாதம்பூரைச் சேர்ந்த ஜலாலுதீன் என்ற சங்கூர் பாபா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அலிகாரைச் சேர்ந்த அகிலேஷ் குமாரி என்பவர் தன் மகன் பிரபாத் உபாத்யாயை, ஒரு கும்பல் கடத்தி சென்று கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக போலீசில் புகார் தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவித்ததற்கு, அக்கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் அளித்த அடையாளத்தின் படி, பரேலியில் உள்ள மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்வியை கற்றுத் தரும் பள்ளியில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, ஹிந்துக்கள் பலர், கட்டாய மதமாற்றம் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதன் மதகுரு அப்துல் மஜீத், 35, கரேலியைச் சேர்ந்த சல்மான், முஹமது ஆரிப், பஹீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய நபரான மெஹ்முத் பேக் என்பவர் மாயமானதை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஐந்து பேர் அடங்கிய இந்த கும்பல், உத்தர பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழை பெண்கள், கணவனை இழந்தோர், திருமணமாகாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலையற்ற இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரை குறிவைத்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதரசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரபாத் உபாத்யாயா உட்பட பலரை மீட்ட போலீசார், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மதமாற்றம் தொடர்பான புத்தகங்கள், கையேடுகள், சான்றிதழ்கள், சி.டி.,க்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள், கூட்டாக 21 வங்கிக் கணக்குகளை அதிக அளவிலான பரிவர்த்தனைகளுடன் இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.