தேடப்பட்ட 41 நக்சல்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்
பிஜாப்பூர்: சத்தீஸ்கரில், 1.19 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்புடன் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 32 பேர் உட்பட 41 நக்சல்கள் அம்மாநில போலீஸ் உயரதிகாரிகளிடம் சரணடைந்தனர். சத்தீஸ்கரில் அடர்ந்த வனப் பகுதியில் பதுங்கியுள்ள நக்சல்களை வேட்டையாடும் பணியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், திருந்தி வாழ நினைக்கும் நக்சல்களை ஊக்குவிக்கும் வகையில், அங்கு 'பூனா மார்க்கம்' திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அவ்வாறு வரும் நக்சல்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மாநில அரசு, மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதனால், முக்கிய நக்சல் அமைப்புகளைச் சேர்ந்தோர் சத்தீஸ்கரில் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் மற்றும் மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த 41 நக்சல்கள், பிஜாப்பூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் முன் நேற்று தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தனர்; இதில், 12 பேர் பெண்கள். மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த துணை தளபதி உட்பட 31 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 10 பேரும் இதில் அடங்குவர். இதில், 32 பேர் மீது ஒட்டுமொத்தமாக, 1.190 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, சரணடைந்தவர்களுடன் சேர்ந்து, இந்தாண்டு மட்டும் பிஜாப்பூர் மாவட்டத்தில் இதுவரை 790 நக்சல்கள் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். தனித்தனி சம்பவங்களில் 202 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 1,031 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்மட்ட நக்சல்கள் உட்பட 2,200க்கும் மேற்பட்டோர் சத்தீஸ் கரில் சரணடைந்துள்ளனர்.