புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி உரையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மணிப்பூர் சம்பங்கள், ரயில் விபத்துகள், பயங்கரவாத தாக்குதல்கள், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் ஆகிய 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.பார்லி., கூட்டு கூட்டத்தில் இன்று (ஜூன் 27) ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையாற்றினார். அவரது உரை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: மோடி அரசு எழுதிக்கொடுத்த ஜனாதிபதி உரையை கேட்டேன். நாட்டு மக்கள் மோடியின் '400 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெறுவோம்' என்ற முழக்கத்தை நிராகரித்துவிட்டனர். அதைவிட குறைவாக வெறும் 272 இடங்களையே அளித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் எதுவும் மாறாததுபோல் பாசாங்கு செய்கிறார். ஆனால் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ராஜ்யசபாவில் நான் பேசுகையில் இது பற்றி விரிவாக சொல்வேன். அதற்கு முன்னதாக சில விஷயங்களை குறிப்பிடுகிறேன்.
வேலைவாய்ப்பு
நீட் முறைகேட்டில் கண்துடைப்பு எடுபடாது. கடந்த 5 ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமை நடத்திய 66 தேர்வுகளில் 12ல் வினாத்தாள் கசிவு, முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் 75 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாங்கள் பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கூறிவிட்டு, மோடி அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பி ஓட முடியாது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்கிறார்கள், இதற்கு மத்திய கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும், நாட்டின் இரண்டு இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கிறார், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான எந்த தகவலும் ஜனாதிபதி உரையில் இல்லை.ஐந்து முக்கிய பிரச்னைகள்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், பயணிகள் ரயில்கள் உள்பட நாட்டில் நிகழும் பயங்கர ரயில் விபத்துகள், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு போன்ற ஐந்து முக்கிய பிரச்னைகள் பற்றி ஒட்டுமொத்த ஜனாதிபதி உரையில் இடம்பெறவில்லை.ஒட்டுமொத்தமாக, கடந்த லோக்சபா தேர்தலில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பொய்களை எல்லாம், கடைசியாக ஒரு முறை பார்லிமென்டில் சொல்லி சில கைதட்டல்களையாவது பெறலாம் என்று மோடி அரசு முயன்றுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.