மருத்துவ கல்லுாரி பாட நேரத்தில் டிமிக்கி ஜூனியர்களை மிரட்டிய 5 சீனியர்கள் சஸ்பெண்ட்
தார்வாட்: பாட நேரத்தில் தங்களுக்கு பதிலாக மருத்துவ கல்லுாரி வகுப்பறையில் ஜூனியர் மாணவர்களை அமர வைத்த ஐந்து சீனியர் மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அறுவை சிகிச்சை துறைக்கான வகுப்பு நடந்தது. இதில், பங்கேற்காமல் டிமிக்கி கொடுக்க, எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு மாணவர்கள் ஐந்து பேர் முடிவு செய்தனர். மிரட்டல்
இதே வேளையில், தங்களுக்கு பதிலாக, முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்கள், அமரும்படியும் வருகை பதிவேட்டின்போது தங்கள் பெயரை அழைக்கும்போது, 'ஆஜர்' சொல்லும்படியும் மிரட்டி உள்ளனர்.அவர்கள் கூறியது போன்று, முதலாம் ஆண்டு மாணவர்களும் செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வகுப்பு பேராசிரியர், அவர்களிடம் விசாரித்தார். அவர்களும் உண்மையை சொல்லி உள்ளனர்.இது பற்றி கல்லுாரி முதல்வர் குருசாந்தப்பாவிடம் வகுப்பு பேராசிரியர் புகார் செய்தார். வெளியே சென்ற இறுதி ஆண்டு மாணவர்கள் ஐந்து பேரும், மாலையில் கல்லுாரிக்கு திரும்பினர். 'தாங்கள் மாட்டிக்கொண்டோம்' என்பதை அறிந்த அவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை மிரட்டி உள்ளனர். அறிக்கை
இத்தகவல், மையத்தின் இயக்குநர் கம்மாரா கவனத்துக்கு வந்தது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கல்லுாரி முதல்வர் தலைமையிலான, ராகிங் எதிர்ப்பு கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டார்.இம்மாதம் 15ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 'இறுதி ஆண்டு மாணவர்களின் செய்கை உண்மையானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஐந்து மாணவர்களும் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கல்லுாரி இயக்குநர் கம்மாரா கூறியதாவது:முதலாம் ஆண்டு மாணவர்களை, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்தது உண்மை என்று தெரிய வந்துள்ளது. கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த ஐந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது. ராகிங் செய்தால், அவர்களிடம் புகார் அளிக்கலாம். பாலியல் ரீதியாக தொந்தரவு இருந்தால், ஆசிரியைகள், மாணவியருக்கென 'பிங்க்' பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் புகாராக எழுதிப் போடலாம்.இம்மையத்தில் இது போன்ற சம்பவம் முதல் முறை. இதுபோன்று சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். போலீசிலும் புகார் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.