ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்; உளவுத்துறை எச்சரிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக, கடந்த மே 7ம் தேதி இந்திய ராணுவத்தினர் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களும் சீர்குலைக்கப்பட்டன. ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி 6 மாதங்களாகிய நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறை கூறியிருப்பதாவது; கடந்த செப்டம்பர் மாதம் முதல் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் எஸ்எஸ்ஜி ஆகியவற்றின் உதவியுடன் லக்ஷர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷி-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஜம்மு காஷ்மீரில் ஊடுருவியுள்ளனர். வரும் வாரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் அல்லது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மேலும், முன்னாள் எஸ்எஸ்ஜி வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் எல்லை தடுப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய நிலைகளை தாக்குதல் நடத்த தயார்நிலையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்., மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்புல் முஹாஜிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயல்பாடின்றி கிடக்கும் பயங்கரவாத தளங்களை புதுப்பிப்பது, ஆப்பரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையில், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையை உள்ளடக்கிய முப்படை ராணுவப் பயிற்சியான திரிசூல் பயிற்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.