கல்வி கட்டணம் செலுத்தாத 6 மாணவர்கள் இருட்டு அறையில் அடைத்து கொடுமை
மைசூரு: தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை, இருட்டு அறையில் அடைத்து தண்டனை கொடுத்த ஆசிரியர் மீது கல்வித்துறையில் பெற்றோர் புகார் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தனியார் பள்ளிகளில், பள்ளிக் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் தண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இந்த வரிசையில், மைசூரு சாலை கெங்கேரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரில் ஆறு பேர், பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று தெரிய வந்தது. இதனால், அந்த மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. பள்ளி கட்டணம் செலுத்தாத ஆறு மாணவர்களையும், ஒரு ஆசிரியர், பள்ளியில் உள்ள நுாலகத்திற்கு அழைத்து சென்றார். அந்த அறைக்குள் மாணவர்கள் சென்ற பின், அங்குள்ள மின் இணைப்பை துண்டித்தார். நுாலகத்தை வெளியில் பூட்டி விட்டு ஆசிரியர் சென்று விட்டார்.காலையிலிருந்து பள்ளி நேரம் முடியும் வரை, அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆறு மாணவர்களும் வெளிச்சம், மின் விசிறி ஏதும் இன்றி அடைபட்டு பரிதவித்தனர். இது தவிர அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி இன்றிதவியாய் தவித்தனர்.பள்ளி நேரம் நிறைவு பெற்ற பின், மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். வீட்டிற்கு சென்ற மாணவர்கள், தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர்.பின்னர், பள்ளிக்கல்வித் துறை, குழந்தைகள் நலத்துறை ஆணையத்தில் புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது குறித்து, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:மாணவர்களை அறையில் அடைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணையில் மாணவர்களை தண்டித்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்ற முறையில் மாணவர்களை தண்டிக்கும், தனியார் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால், மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவர். மாணவர்கள் தண்டிக்கப்பட்டால், போலீசிடம் புகார் செய்யலாம். பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிடும் மாணவர்களின் பெயர், ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.