சில்மிஷத்தை பார்த்த 6 வயது சிறுமி கொலை
ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், 6 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருமணமான பெண் மற்றும் அவரது மைனர் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிகந்தரா ராவ் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உர்வி, 6. கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது உர்வி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில், ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் சாக்குப்பையில் சடலமாக உர்வி மீட்கப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான 30 வயது பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது: திருமணமான அந்த பெண்ணுக்கு, கடந்த மூன்று மாதமாக 17 வயது சிறுவன் ஒருவருடன் கள்ள உறவு இருந்துள்ளது. சம்பவத்தன்று அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் வெளியே சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமி அதை பார்த்துவிட்டார். இது குறித்து தன் தந்தையிடம் சொல்வதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்து சென்று கிணற்றில் வீசியுள்ளளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து, பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.