உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் 65 சதவீத ஓட்டுப்பதிவு

ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் 65 சதவீத ஓட்டுப்பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்டில், 43 சட்ட சபை தொகுதிகளுக்கு நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று, 43 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது; 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ராஞ்சி, கோடெர்மா, ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, கிழக்கு சிங்பும், செரைகேலா கர்சவான், குந்தி, கும்லா, சிம்கேடா, லோஹர்டகா, லதேஹர் உள்ளிட்ட மாவட்டங்களில், 43 தொகுதிகளில், நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. ஒருசில இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், மாலை 6:00 மணியை தாண்டியும் ஓட்டுப்பதிவு நடந்தது. முதற்கட்ட தேர்தலில், மாலை 5:00 மணி நிலவரப்படி, 64.86 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. அதிகபட்சமாக, லோஹர்டகா மாவட்டத்தில், 73.21 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக, ஹசாரிபாக் மாவட்டத்தில், 59.13 சதவீத ஓட்டுகளும் பதிவாகின. ஒருசில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் வந்தன.பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்ததாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தன.காங்., பொதுச்செயலரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. மாலை 6:00 மணி நிலவரப்படி, இந்த தொகுதியில், 64.69 சதவீத ஓட்டுப்பதிவு பதிவானது. கடந்த ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலில், வயநாடு தொகுதியில், 74 சதவீத ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.இதேபோல், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அசாம், பீஹார், கர்நாடகா, ம.பி., - சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மேகாலயா ஆகிய மாநிலங்களில், காலியாக உள்ள 31 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார்

தேர்தலுக்கு முந்தைய, 48 மணி நேரத்தில் யாரும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது விதி. ஆனால், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது. ஜார்க்கண்டில், நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாகவும், அதில் 250 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், சச்சார் கமிட்டி அறிக்கை பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்ததாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா எம்.பி., நேற்று கூறியதாவது: தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் பிரசாரம் செய்யவோ, தேர்தல் அறிக்கை வெளியிடவோ கூடாது என்ற நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமீறல். காங்.,தலைவர் ராகுல் ஒருபோதும் அரசியல் சட்டத்தை மதிப்பதில்லை. எனவே காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ