வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர் உட்பட 7 நக்சல்கள் சுட்டுக்கொலை
அமராவதி: ஆந்திராவில், இரண்டாவது நாளாக பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர் உட்பட ஏழு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவின் அல்லுாரி சீதாராமராஜு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் தலைவரும், 50 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான மத்வி ஹித்மா உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதே மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் மூன்று பெண்கள் உட்பட ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் டெக் சங்கர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பதுபுரத்தைச் சேர்ந்த இவர், ஐ.இ.டி., எனப்படும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தகவல் தொழில்நுட்ப வல்லுனரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக நக்சல் இயக்கத்தின் ஆந்திரா, ஒடிஷா மாநில எல்லை பொறுப்பாளராக பணியாற்றினார். தொடர்ச்சியாக போலீஸ் தேடுதல் வேட்டையால் இவர் ஆந்திராவுக்கு தப்பி வந்திருக்கலாம் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர முன்னாள் நக்சல் தலைவர் கேசவ ராவின் தளபதியாக பணியாற்றிய சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் பர்குலாங்கை சேர்ந்த ஜோதி, 32, அதே பகுதியில் உள்ள ஜாகர்குண்டா நக்சல் இயக்க தளபதி லோகேஷ், துணை தளபதி வாசு, மற்றும் உறுப்பினர்கள் சுரேஷ், அனிதா, ஷம்மி ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 மாவட்டங்களில் 50 பேர் கைது ஆந்திராவின் கிருஷ்ணா, எல்லுரு, என்.டி.ஆர்., காக்கிநாடா, கொனசீமா ஆகிய ஐந்து மாவட்டங்களில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில புலனாய்வு அமைப்பினர், சிறப்பு புலனாய்வு பிரிவினர், மாவட்ட போலீசார் மற்றும் விஜயவாடா கமிஷனரக போலீசார் இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ் சந்திர லத்தா கூறியதாவது: கைது செய்யப்பட்ட 50 பேரும் சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தர், தன்டகாரண்யா மண்டலத்தைச் சேர்ந்த நக்சல் சிறப்பு மண்டல கமிட்டி, டிவிஷனல் கமிட்டி மற்றும் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள். சுக்மா, பிஜப்பூர், நாராயண்பூர் மற்றும் மேற்கு பஸ்தர் மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் போலீசாரின் தீவிர வேட்டையை தொடர்ந்து, இங்கு தப்பி வந்த நிலையில் சிக்கினர். இவ்வாறு அவர் கூறினார்.