பெங்களூரு : மாநில அரசு ஊழியர்களுக்கு, 7வது சம்பள கமிஷனை அமல்படுத்துவதாக முதல்வர் சித்தராமையா சட்டசபையில் நேற்று அறிவித்தார். இதனால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 27,000 ரூபாயும்; அதிகபட்சம் 2.41 லட்சம் ரூபாய் வரையும் சம்பளம் உயரும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய சம்பளத்தை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக மாநில அரசு ஊழியர்கள், 7வது சம்பள கமிஷன்படி சம்பளம் வழங்கும்படி நீண்ட காலமாக கோரி வந்தனர். முந்தைய ஆட்சியின் போது, போராட்டமும் நடத்தினர்.பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, 7வது சம்பள கமிஷன்படி சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, அடிப்படை சம்பளத்தின் மீது, 27.50 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படலாம் என்று 7வது சம்பள கமிஷன் அரசுக்கு சிபாரிசு செய்தது. அப்போது, 17 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 27.50 சதவீதம் உயர்த்துவதற்கு, நேற்று முன்தினம் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று சட்டசபையில் முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிவிப்பு:ஏழாவது சம்பள கமிஷன், மாநில அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் 27.50 சதவீதம், 2022 ஜூலை 1ம் தேதி முதல், உயர்த்தும்படி அரசுக்கு சிபாரிசு செய்தது.சிபாரிசின்படி, சம்பளம் உயர்த்துவதற்கு, 2024 ஜூலை 15ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே 2022 ஜூலை 1ம் தேதி முதல், 27.50 சதவீதம் அடிப்படை சம்பளமும்; 31 சதவீதம் அகவிலைப்படியும் உயர்த்தப்படும்.இதன்படி, தற்போது 17,000 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச சம்பளம், 27,000 ரூபாயாகவும்; அதிகபட்ச சம்பளம் 1,50,600 ரூபாயாக உள்ளது, 2,41,200 ரூபாயாகவும் உயரும். இம்மாதம் முதலே இது அமலுக்கு வரும். ஆகஸ்ட் 1ம் தேதி புதிய சம்பளம், வங்கி கணக்கிற்கு வந்து விடும்.மேலும், 75,300 ரூபாய் முதல், 1,20,600 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இந்த சம்பள உயர்வு, நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களுக்கும் பொருந்தும்.சம்பள உயர்வால், மாநில அரசுக்கு, ஆண்டிற்கு, 20,208 கோடி ரூபாய் சுமை ஏற்படும். இதற்கான நிதி, 2024 - 25 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.