8 வயது சிறுமியின் வலது கை அகற்றம்: நீதி கேட்டு குடும்பத்தினர் போலீசில் புகார்
பாலக்காடு: பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில், சரியான சிகிச்சை அளிக்காததால், எட்டு வயது சிறுமியின் வலது கை அகற்றப்பட்ட சம்பவத்தில், குடும்பத்தினர் நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷனை அணுகியுள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பல்லச்சேனை பகுதியைச் சேர்ந்த பிரசீதாவின் மகள் வினோதினி, 8. அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், கடந்த செப். 24ம் தேதி தரையில் விழுந்து வினோதினி காயமடைந்தார். பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர். சிறுமியின் வலது கையில் பிளாஸ்டர் போட்டு, ஐந்து நாட்கள் கழித்து வருமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகும் வலி தாங்காமல் அழுத சிறுமியின் கையில் இருந்த பிளாஸ்டரை அவிழ்த்து பார்த்த போது, கை வீங்கி இருந்தது. மீண்டும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்ற டாக்டர்களிடம் காண்பித்தபோது, தொடர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தகுந்த சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் கை பாதித்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து கையே அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் சுகாதாரத்துறை இரு டாக்டர்களை 'சஸ்பெண்ட்' செய்தது. சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்தும், சிறுமி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் நீதி தேடி சிறுமியின் பாட்டி ஓமனா, பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஓமனா கூறியதாவது: சிறுமியின் சிகிச்சைக்கான செலவு மற்றும் எதிர்கால பிரச்னையை சமாளிக்க சுகாதாரத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை போராடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.