குஜராத்தில் மண் சுவர் இடிந்து தொழிலாளர்கள் 9 பேர் பலி
மெஹ்சானா : குஜராத்தில் மெஹ்சானா மாவட்டத்தின் ஜசல்பூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க, 16 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நேற்று நடந்தது.இந்த பணியில், 10 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட போராட்டத்திற்கு பின் ஒருவரை உயிருடன் மீட்டனர். எனினும், மற்ற ஒன்பது பேரையும் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் மூன்று பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் குஜராத்தின் தாஹோத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும். காயமடைந்த நபரின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.