உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்குவாரியால் உருவான அழகான நீர்வீழ்ச்சி

கல்குவாரியால் உருவான அழகான நீர்வீழ்ச்சி

கர்நாடகாவில் இயற்கையான முறையில் உருவான நீர் வீழ்ச்சிகள் ஏராளம். அதேபோன்று செயற்கையாக உருவான நீர் வீழ்ச்சிகளும், சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. இவற்றில் நிடகோடி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது, சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நீர்வீழ்ச்சிகளை காண சுற்றுலா பயணியர் குவிகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், அபூர்வமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இயற்கையான நீர் வீழ்ச்சிகள் இருப்பதை போன்று, செயற்கையாக உருவான நீர் வீழ்ச்சிகளும் உள்ளன.உத்தரகன்னடா, சித்தாபுராவின், நிடகோடு கிராமம் உள்ளது. ஒரு காலத்தில் பெரிய அளவில், கல்குவாரி நடந்தது. அதிக வீரியம் கொண்ட வெடிகுண்டுகள் பயன்படுத்தி, பாறைகள் தகர்க்கப்பட்டன. இங்கிருந்து வெடித்து சிதறிய பாறைகள் மூலமாக, அழகான நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது.நீர் வீழ்ச்சியை காண, மலை ஏற வேண்டியது இல்லை. ஆழமாக இருக்கும் என்ற பயமும் தேவையில்லை. அதிக தொலைவு நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. அகநாசினி ஆறு இந்த பாறைகளுக்கு இடையே, வளைந்து, நெளிந்து நர்த்தனமாடி, சூப்பரான நீர் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீர் வீழ்ச்சி 20 முதல் 25 அடி உயரத்தில் இருந்து, கீழே பாய்கிறது. உயரம் குறைவு என்றாலும், அழகுக்கு குறைவில்லை. இதன் பரப்பளவு அதிகம். 40 முதல் 50 ஏக்கர் வரை தண்ணீராக காட்சியளிக்கிறது.நீர் வீழ்ச்சியின் சுற்றுப்பகுதிகளில் குளம் போன்று தண்ணீர் தேங்கி நிற்பதை காண, அற்புதமான காட்சியாக இருக்கும். இதே காரணத்தால் சுற்றுலா பயணியர் குவிகின்றனர். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன், குடும்பத்துடன் வருகின்றனர்.காலை முதல், மாலை வரை உல்லாசமாக, நிம்மதியாக பொழுது போக்கிவிட்டு செல்கின்றனர். மிகவும் அமைதியான சூழ்நிலை இருப்பதால், மனதுக்கு இதமான அனுபவத்தை அளிக்கும்.

உத்தரகன்னடா, சிர்சியில் இருந்து சித்தாபுராவுக்கு செல்லும் பாதையில், நிடகோடி கிராமம் உள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவு நடந்து சென்றால், நிடகோடு நீர் வீழ்ச்சியை அடையலாம்.

 முக்கிய நகரங்களில் இருந்து, சிர்சிக்கு பஸ் வசதி உள்ளது.  ரயில்களும் இயங்குகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. சொந்த வாகனங்களிலும் வரலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி