| ADDED : அக் 31, 2024 09:07 PM
சண்டிகர்: ராஜஸ்தான் கட்டடக்கலையில் அழகிய கோட்டை போல பங்களா கட்டியதற்காக, ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வாட்சை பரிசாக வழங்கி உள்ளார், தொழிலதிபர் ஒருவர்.பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் குர்திப் தேவ் பாத். இவருக்கு ராஜஸ்தானில் உள்ள பாரம்பரிய கோட்டையை போல், ஒரு கோட்டை போல வீடு கட்ட விருப்பம் வந்துள்ளது. ஒன்பது ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பங்களா கட்ட, ஒப்பந்ததாரர் ராஜீந்தர் சிங் ரூப்ரா என்பவரை அணுகியுள்ளார்.அவர் தொழிலதிபர் குர்தீப் எண்ணம் போல் அருமையான பங்களாவை கட்டி முடித்துள்ளார். இதனால் ஒப்பந்ததாரர் ராஜீந்தர் சிங் ரூப்ராவுக்கு, ரூ. 1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கி கவுரவித்தார் குர்திப் தேவ் பாத். 18 காரட் மஞ்சள் தங்க நிறத்தில் ரோலக்ஸ் வாட்ச் உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேகமாகவும், தரமாகவும், அசப்பில் பழங்கால கோட்டை போலவே பங்களா கட்டிக் கொடுத்ததற்காக, பரிசு வழங்கியதாக தொழிலதிபர் குர்தீப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.கோட்டை எப்படி இருக்கு?கட்டடக் கலைஞர் ரஞ்சோத் சிங் என்பவரால் இந்த கோட்டை பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய அரங்குகள் மற்றும் தோட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ராஜீந்தர் சிங் ரூப்ரா யார்?
ராஜிந்தர் சிங் ரூப்ரா பஞ்சாபின் ஷாகோட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர். இந்த திட்டத்திற்காக 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி கோட்டை பங்களாவை கட்டி உள்ளார். கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ளது. இது குறித்து தொழிலதிபர் குர்திப் தேவ் பாத் கூறியதாவது: இது ஒரு பங்களா மட்டுமல்ல; பழங்கால இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தில் பணியாற்றுவது ஒரு சவாலாகவும், மிகப்பெரிய அனுபவமாகவும் இருந்ததாக ஒப்பந்ததாரர் ரூப்ரா கூறினார். மேலும் அவர், கோட்டை கட்டுவதற்காக பணியாற்றிய ஒட்டுமொத்த தொழிலாளர்களின் முயற்சியை பாராட்டினார்.