இஸ்ரேல் பிரதமர் தேடப்படும் நபர் டில்லியில் பரபரப்பு போஸ்டர்
புதுடில்லி, ஜூன் 4-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தேடப்படும் குற்றவாளியாக சித்தரித்து டில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டில்லியில் உள்ள பெல்ஜியம் நாட்டு துாதரக அதிகாரியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.டில்லியில் பலத்த பாதுகாப்பு மிக்க சாணக்யபுரி பகுதியில், 'தேடப்படும் நபர்' என்ற தலைப்பில் சில போஸ்டர்கள் கடந்த வாரம் ஒட்டப்பட்டிருந்தன. அதில் மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புகைப்படம் இருந்தது. அதன் கீழே, சில நாட்களாக இந்த நபர் தேடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து டில்லி போலீசார் சாணக்யபுரி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீலநிற சட்டையும், கருப்பு பேன்ட் அணிந்த நபர் சைக்கிளில் வந்து மின்கம்பங்களில் போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த நபர் பெல்ஜியத்தை சேர்ந்த துாதரக அதிகாரி என்பதும், டில்லியில் உள்ள அந்நாட்டு துாதரகத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது.இதுகுறித்து டில்லி போலீசார் உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் பெல்ஜியம் அரசிடம் துாதரக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். துாதரக அதிகாரிக்கான பாஸ்போர்ட் வைத்துள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது.