5வது மாடியிலிருந்து தள்ளி பெண் கொலை புர்ஹா அணிந்த வாலிபர் வெறிச்செயல்
புதுடில்லி:டில்லியில், ஐந்தாவது மாடியிலிருந்து பெண்ணை தள்ளி விட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.உத்தர பிரதேசத்தின் ராம்பூர் என்ற பகுதியை சேர்ந்த தவுபீக், 26, என்ற நபருக்கும், டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள அசோக்நகர் என்ற இடத்தில் வசிக்கும், 19 வயது பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்தது.திடீரென அந்த பெண், தவுபீக்குடன் பேச மறுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில், அவர் குடியிருந்த ஐந்து மாடி அடுக்கு மாடி குடியிருப்புக்கு தவுபீக் சென்றார்.அவரின் அடையாளம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம் பெண்கள் உடல் முழுக்க மறைக்கும், புர்ஹா என்ற ஆடையை அவர் அணிந்து வந்திருந்தார். அவரிடம் அந்த பெண், பேசிக் கொண்டிருந்த போது, புர்ஹா அணிந்திருந்தது தவுபீக் தான் என்பதை அறிந்ததும், அந்த பெண், அவரிடம் சண்டையிட்டார்.உடனே, அந்த பெண்ணை பிடித்து, ஐந்தாவது மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டு கொன்றார் தவுபீக். அங்கிருந்து ஓடிய அவரை, அந்த கட்டடத்தின் காவலர்கள் பிடித்து, போலீசார் வசம் ஒப்படைத்தனர்.அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.