டில்லி மக்களை பழிவாங்கும் ஆம் ஆத்மி அமைச்சர் பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு
புதுடில்லி:“டில்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுத்த பஞ்சாப் சதி செய்கிறது,”என, நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.பர்வேஷ் வர்மா, நிருபர்களிடம் கூறியதாவது:பஞ்சாபில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு, தலைநகர் டில்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுத்த சதி செய்கிறது. ஆறு நாட்களாக டில்லிக்கு தண்ணீஇர் வினியோகம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி 88 கனஅடி, நேற்று முன் தினம் 130 கனஅடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.டில்லிக்கு வழங்க வேண்டிய பங்கு தண்ணீரை பஞ்சாப் அரசு பறிக்கிறது. டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்ததால், டில்லி மக்களைப் பழிவாங்கவே ஆம் ஆத்மி இந்தச் செயலை செய்து வருகிறது. தண்ணீரை வைத்து ஆம் ஆத்மி அரசியல் செய்கிறது.தினமும் திறந்து விட வேண்டிய தண்ணீரை குறைத்து, கோடை காலத்தில் டில்லி மக்களை மேலும் சிரமப்படுத்துகின்றனர்.இதேபோலத்தான், ஹரியானா மாநிலத்துக்கும் பஞ்சாப் அரசு தண்ணீரை திறந்து விடாமல் அரசியல் செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பக்ரா அணையிலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக ஹரியானாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், பஞ்சாப் சட்டசபையில் நேற்று முன் தினம் நடந்த சிறப்புக் கூட்டத்தில், தன் பங்கில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட ஹரியானா மாநிலத்துக்கு வழங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.