மும்பை, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் முனையத்தில் முதன்மை எலெக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றுபவர் 59 வயது நபர். இவரது மொபைல் எண்ணுக்கு செப்., 16ல் பதிவுசெய்யப்பட்ட குரல் தகவல் ஒன்று வந்துள்ளது. வீடியோ அழைப்பு
அதில், உங்கள் மொபைல் போன் இரண்டு மணி நேரத்தில் முடக்கப்படும் என்றும் மேலும் தகவல்களுக்கு பூஜ்ஜியத்தை அழுத்தவும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே இன்ஜினியர் பூஜ்ஜியத்தை அழுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து வீடியோ அழைப்புக்கு மாறியுள்ளது. இணைப்பில் தோன்றிய நபர்கள் தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் என்றும், 58 லட்சம் ரூபாய் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்த வங்கி கணக்கு ஒன்றில், உங்களின் மொபைல் எண் இடம் பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.அவர்களிடம் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு இன்ஜினியர் பணிக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை போனில் அழைத்து 'இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியிருக்கிறது. உடனே வீட்டுக்கு வாருங்கள்' என கூறி மதியம் 2:00 மணிக்கு வீடியோ கால் பேச ஆரம்பித்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அவரின் நிதிநிலைமை ஆகியவற்றை தெரிந்து கொண்டனர். ஆன்லைன்
மறுநாள் காலை 9:30 மணி வரை, 20 மணி நேரத்திற்கு விடிய விடிய இந்த வீடியோ கால் இணைப்பு தொடர்ந்துள்ளது. அதன் பின், சி.பி.ஐ., கோர்ட்டில் ஆன்லைன் வாயிலாகவே ஆஜர் செய்வதாக கூறியுள்ளனர். அப்போது நீதிபதி என அறிமுகப்படுத்திக் கொண்டவர், இன்ஜினியரின் வங்கி கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும் படி கூறியுள்ளார். அவற்றை ஆய்வு செய்வது போல் நடித்து, ஜாமினுக்காக அவர்கள் அளித்த வங்கிக் கணக்கில், 9 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கூறினர். அவர் அந்த கணக்கிற்கு பணம் செலுத்திய பின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மீண்டும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.