பெலகாவி யூனியன் பிரதேசமாக்க ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
'பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்,'' என, உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ., ஆதித்யா தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.கர்நாடகா -- மஹாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இங்கு மராத்தி மொழி பேசுவோர் கணிசமாக வசிப்பதால் பெலகாவியை, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், கர்நாடகா மறுக்கிறது.பெலகாவி எங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில், சுவர்ண விதான் சவுதாவும் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும், பெலகாவியில் எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி எதிர்ப்பு தெரிவித்து, மகாமேளா என்ற பெயரில் கூட்டம் நடத்தியது. 3 ஆண்டுகள்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூட்டம் நடத்திய போது ஏற்பட்ட பிரச்னையால், அதற்கு பின், மகா மேளா நடத்த அனுமதி கிடைக்கவில்லை.தற்போது பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மகா மேளா நடத்த கர்நாடக அரசு அனுமதிக்க வேண்டுமென, மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் கலெக்டர் வாயிலாக, எம்.இ.எஸ்., அமைப்பினர் கர்நாடக அரசிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் அரசு அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்.எல்.ஏ., ஆதித்யா தாக்கரே, மும்பையில் நேற்று அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்துள்ளது. இதனால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், மறுபுறம் பெலகாவி நிலைமையை பார்க்க வேண்டும். அங்கு வசிக்கும் மராத்தி மக்களின் உரிமைகள், சுதந்திரம் பறிக்கப்படுகிறது. 814 கிராமங்கள்
பெலகாவி நோக்கி சென்ற எங்கள் கட்சியின் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பெலகாவி, கார்வார், பீதர், நிப்பாணி உள்ளிட்ட மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 814 கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்னை, வரும் நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால், பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணியில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியும் உள்ளது. ஆதித்யா தாக்கரே கருத்தின் மூலம், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. -- நமது நிருபர் --