ஏர் - இந்தியா ஊழியர்கள் ஹோட்டல் அறை பகிர எதிர்ப்பு
மும்பை, 'ஏர் - இந்தியா' விமான கேபின் பணியாளர்களில் ஒரு தரப்பினர், ஹோட்டல் அறைகளை பகிர்ந்து கொள்ளும்படி வகுக்கப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு தடை விதிக்கும்படி மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு கேபின் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதிஉள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த, 'ஏர் - இந்தியா' விமான சேவை நிறுவனத்தை, 'டாடா' குழுமம் விலைக்கு வாங்கி நிர்வகித்து வருகிறது. 'விஸ்தாரா' விமான சேவை நிறுவனமும், நவ., 11 முதல் ஏர் - இந்தியாவுடன் இணைக்கப்படஉள்ளது.இந்நிலையில், ஏர் - இந்தியா விமானத்தில் பணியாற்றும் பைலட்கள், கேபின் பணியாளர்கள் தங்கள் பயணத்தின் போது அவர்கள் செல்லும் ஊர்களில் தங்க நேர்ந்தால், அவர்களுக்கு ஹோட்டல்களில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.இந்த கொள்கையில், ஏர் - இந்தியா நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பயணிக்கும் கேபின் பணியாளர்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள மூத்த கேபின் பணியாளர்கள் தவிர மற்றவர்கள், ஹோட்டல் அறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டிச., 1 முதல் அமலுக்குவருகிறது.இதற்கு, பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கொள்கை மாற்றம் சட்ட விரோதமானது, தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல் என, ஏ.ஐ.சி.சி.ஏ., எனப்படும் அனைத்திந்திய கேபின் பணியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் சங்கம் தலையிட்டு, இந்த புதிய கொள்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளது.இது தொடர்பாக, ஏர் - இந்தியா தலைவர் கேம்ப்பெல் வில்சனுக்கும் பணியாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.