உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானம் தாமதம்: 5 மணி நேரம் தவித்த பயணியர்

ஏர் இந்தியா விமானம் தாமதம்: 5 மணி நேரம் தவித்த பயணியர்

மும்பை: மும்பையில் இருந்து, துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த, 'ஏர் - இந்தியா' விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், குழந்தைகளுடன் 300க்கும் மேற்பட்ட பயணியர் 5 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள் சிக்கி தவித்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ909 என்ற விமானம், 300க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று முன்தினம் காலை 8:25 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரமானதால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதற்கிடையே, விமானத்திற்குள் குளிர்சாதன வசதியும் தடைப்பட்டதால், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. தங்களை கீழே இறங்க அனுமதிக்கும்படி விமான பணியாளர்களுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களின் கோரிக்கைகளை, விமான பணியாளர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளுடன் 300க்கும் மேற்பட்ட பயணியர் விமானத்திற்குள்ளேயே சிக்கி தவித்தனர்.ஐந்து மணி நேரத்திற்கு மேலானதால் பயணியர் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தின் கதவுகளை பணியாளர்கள் திறந்தனர். இதைத்தொடர்ந்து, பயணியர் கீழே இறங்கி தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து, அந்த விமானம் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி துபாய்க்கு இரவு 7:59 மணிக்கு சென்றடைந்தது. இதுதொடர்பாக விமான பயணியர் சிலர், தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஏர் இந்தியா நிர்வாகத்திடம் முறையிட்டனர். எனினும், ஏர் இந்தியா நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ