கொச்சியில் இருந்து டில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கொச்சியில் இருந்து டில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு நேற்றிரவு 10.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் விமானத்தை விமானி ஆய்வு செய்த விமானி தொழில்நுட்பகோளாறு இருப்பதை கண்டறிந்தார். சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானி கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் கொச்சியில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது.ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனதார வருந்துகிறோம். எங்களுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விமானத்தில் இருந்த எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் கொச்சியில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானத்தின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த ஏர் இந்தியா விமானம் ஏதோ அசாதாரணமானது. விமானம் ஓடுபாதையில் சறுக்கியது போல் இருந்தது. இன்னும் புறப்படவே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.