உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமான விபத்து இன்சூரன்ஸ் வழங்குவதில் சிக்கல்

ஏர் இந்தியா விமான விபத்து இன்சூரன்ஸ் வழங்குவதில் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'ஏர் இந்தியா' விமான விபத்தில் உயிரிழந்தோருக்கான காப்பீட்டு தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில், ஏர் இந்தியா விமானம் கடந்த, 12ல் விபத்துக்குள்ளானதுமே இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், வெளிநாட்டு மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குவது குறித்த தங்களின் தரவுகளுடன், இறந்தவர்களின் விபரங்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டது. மேலும் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கான காப்பீடை வழங்குவதில் எந்த நடைமுறை சிக்கலோ, தாமதமோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, எல்.ஐ.சி., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், எச்.டி.எப்.சி., லைப், இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி., மற்றும் டாடா ஏ.ஐ.ஜி., இன்சூரன்ஸ் போன்ற முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் தங்கள் உதவி மையங்களை அமைத்துள்ளன.காப்பீடு செய்தவர் இறந்தால், அவர் நாமினியாக பரிந்துரைத்தவரிடம் இழப்பீடு தொகை ஒப்படைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆமதாபாத் விபத்தில், கணவர் இறந்த நிலையில், நாமினியான மனைவியும் இறந்துவிட்டதால், பணத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பத்தில் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன.காப்பீடு செய்தவரும், நாமினியும் இறந்ததால் வாரிசு போன்ற ரத்த சொந்தங்களை தேடி பணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருப்பின், கூட்டாக அனுமதி பத்திரம் பெற்று, ஒருவரிடம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அந்த துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால், காப்பீடு தொகைக்கான ஆவணங்களை பெரும்பாலானவர்கள் சமர்ப்பிக்கவில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரணிக்காத மனிதம்!

விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, ராஜேஷ் படேல் என்பவர், 840 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 50,000 ரூபாய், ஒரு சில பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதையின் நகல், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவற்றை மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.கட்டுமான தொழில் செய்யும் ராஜேஷ் படேல், 56, விபத்து நடந்த இடத்தின் அருகே அன்றைய தினம் கட்டுமான பணியில் இருந்தார். விமானம் விழுந்து நொறுங்கிய ஐந்து நிமிடங்களில் தன் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''விபத்து பகுதியில் அனல் கடுமையாக இருந்ததால் முதல் 15 -- 20 நிமிடங்கள் எங்களால் நெருங்க முடியவில்லை. தீயணைப்பு படையின் முதல் குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள் வந்த உடன் நாங்கள் மீட்புப் பணியில் இறங்கினோம். ஸ்ட்ரெச்சர்கள் இல்லாதால் காயம் அடைந்தவர்களை மீட்க, புடவைகள் மற்றும் பெட்ஷீட்களை பயன்படுத்தினோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிவேதா
ஜூன் 19, 2025 08:08

தலைமறைவாகி உள்ளவர்களைக்கூட கண்டுபிடிக்கும் திறமை உள்ள உளவுத்துறையால் இறந்தவர்களின் சொந்தங்களை கண்டுபிடிக்க சில மணி நேரங்கள் போதும். மாநில காவல்துறையும் இதற்கு உதவவேண்டும்


Suppan
ஜூன் 19, 2025 13:09

உளவுத்துறைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கணவரோ மனைவியோ இல்லையென்றால் சொந்தங்கள் வாரிசு சான்றிதழ் அளிக்கவேண்டும்.