டில்லியில் காற்று மாசு தொடர்ந்து மிகவும் மோசம் ஆனந்த் விஹார் ஆபத்தான பகுதி
புதுடில்லி:டில்லியில், நேற்று காலை நிலவரப்படி, காற்றின் தரம், மிகவும் மோசம் என்ற அளவிலேயே இருந்தது. எனினும், ஆனந்த் விஹார் பகுதி, ஆபத்தான பகுதியிலேயே உள்ளது. தீபாவளி கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின் படி, பட்டாசுகள் இரண்டு மணி நேரம் வெடிக்க அனுமதிக்கப்பட்டது. எனினும், காலை துவங்கி, மறுநாள் அதிகாலை வரை, பட்டாசுகளை மக்கள் மகிழ்ச்சியாக வெடித்தனர். காற்று மாசு இதனால், டில்லியின் காற்று மாசு மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டது. அதை மேலும், அதிகரிக்கும் வகையில் கீழ் காற்று வீசியது. நேற்று காலை நிலவரப்படி, 'சமீர்' எனும் செயலி வாயிலாக, ஒவ்வொரு மணி நேரமும், டில்லியின் காற்று மாசு விவரம் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரம், 'ஏ.க்யு.ஐ.,' 428 ஆக இருந்தது. இது, மிகவும் ஆபத்தான பகுதி என்ற அளவிலேயே உள்ளது. மொத்தமுள்ள, 48 கண்காணிப்பு மையங்களில், வெறும், 6 மையங்களில் மட்டுமே காற்றின் தரம், மோசம் என்ற அளவில் இருந்தது. மீதமுள்ள 42 கண்காணிப்பு மையங்களிலும், காற்றின் தரம், மிகவும் மோசமாகவே இருந்தது. ஒட்டுமொத்த டில்லியின் காற்றின் சுத்த தரம், '326 ஏ.க்யு.ஐ.,' ஆக இருந்தது. வெப்பநிலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீடுகளின் படி, ஏ.க்யு.ஐ., 50க்குள் இருந்தால் சிறப்பானது; 51 - 100 ஆக இருந்தால் திருப்தி; 101 - 200 ஆக இருந்தால் நடுநிலை; 201 - 300 வரை இருந்தால், மோசம் என்ற அளவிலும் கூறப் படுகிறது. அதுவே, 301 - 400 ஆக இருந்தால், மிகவும் மோசம்; 401 - 500 ஏ.க்யு.ஐ., என்றால், மிகவும் மோசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. டில்லியில் நேற்று காலை வரை பதிவான, குறைந்தபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருந்தது. அதிகபட்ச வெப்ப நிலை, 32 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவானதாக, தெரிவிக்கப் பட்டது.