விமான நிறுவனங்கள் வானிலை தகவல்களை பகிர்வது கட்டாயமாகிறது
புதுடில்லி: விமானங்கள் புறப்படுவதற்கு முன்னும், தரையிறங்கும் போதும் அப்போதைய வானிலை விபரங்கள் விமான நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் விபரங்கள், இந்திய வானிலை மையத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. சர்வதேச விமான நிறுவனங்கள், இது தொடர்பான தரவுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. ஆனால், உள்நாட்டு விமான நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வானிலை நிலவரங்களை, இந்திய வானிலை மையத்துடன் பகிர்ந்து வருகின்றன. ஆகையால், விபரங்களை பகிர்வதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
விபரங்கள் பகிர்வது, விமான நடவடிக்கைகளுக்காக மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் வானிலை முன்னறிவிப்புக்கு உதவியாக இருக்கும். சேகரிக்கப்படும் விபரங்களின் அடிப்படையில், வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்படும். விமானங்கள் மற்றும் வானிலை பலுான்களில் இருந்து பெறப்படும் தகவல்கள், பிற தகவல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது.ஏனென்றால், அவை மேற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்லாமல், வளிமண்டலத்தின் முழுமையான படத்தையும் வழங்குகின்றன. பெரும்பாலான நாடுகளில், வானிலை தரவுகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கேயும், அடுத்த ஓராண்டில் இது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.