உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜித் பவாருக்கு கடிகாரம் சின்னம் உச்ச நீதிமன்றம் தற்காலிக உத்தரவு

அஜித் பவாருக்கு கடிகாரம் சின்னம் உச்ச நீதிமன்றம் தற்காலிக உத்தரவு

புதுடில்லி,'தேசியவாத காங்., விவகாரத்தில், தேர்தல் கமிஷன் முடிவின்படி, தற்போதைக்கு, 'கடிகாரம்' சின்னத்தை அஜித் பவாரும், 'டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னத்தை சரத் பவார் பிரிவினரும் பயன்படுத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2023 ஜூலையில், தேசியவாத காங்., மூத்த தலைவர் அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தார்.

விசாரணை

தொடர்ந்து, துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களில் எட்டு பேர் அமைச்சர்களாகினர். இதையடுத்து, அஜித் பவார் - சரத் பவார் என, இரு பிரிவுகளாக தேசியவாத காங்., பிரிந்தது. இரு தரப்பினரும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். இதை விசாரித்த தேர்தல் கமிஷன், அஜித் பவார் தரப்புக்கு, கட்சியின் பெயர் மற்றும் கடிகாரம் சின்னத்தை வழங்கியது.தேசியவாத காங்., சரத் சந்திர பவார் என்ற கட்சியின் பெயரை, சரத் பவாருக்கு வழங்கிய தேர்தல் கமிஷன், டிரம்பெட் ஊதும் மனிதன் சின்னத்தையும் ஒதுக்கியது. 'கடிகாரம் சின்னத்தில் போட்டியிட்டால், அஜித் பவார் தரப்புக்கு சாதகமாக இருக்கும். எனவே வேறு சின்னத்தை வழங்க வேண்டும்' எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், சரத் பவார் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இதை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், ஒரு மாதத்துக்குள் இதுகுறித்து பதிலளிக்கும்படி அஜித் பவாருக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் தரப்பு பயன்படுத்தலாம். எனினும் இது தொடர்பான போஸ்டர்களில், 'நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது' என குறிப்பிட வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் இந்த குறிப்பு இருக்க வேண்டும். சரத் பவார் அணியினர், டிரம்பெட் ஊதும் மனிதன் சின்னத்தையும், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் என்ற கட்சியின் பெயரையும் பயன்படுத்தலாம். இந்த உத்தரவு தற்காலிகமானது தான். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

கேலி செய்வதா?

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி விஸ்வநாதன் கூறியதாவது:ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டால், தேர்தல் கமிஷன் ஒரு தரப்பை அங்கீகரிக்கும் போது, சட்டசபை பலத்தின் அடிப்படையில் மட்டுமே அங்கீகரிக்கிறது. அதன் கட்டமைப்பு பலத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை; இது, சட்டத்தின் 10வது அட்டவணையின் இல்லாத விஷயத்தை அங்கீகரிப்பதாகாதா? கட்சித் தாவல் நடவடிக்கைகளால், சின்னத்தை பெற முடியும் என்ற விஷயத்தை ஊக்குவிக்கும் வகையில் இது உள்ளது. இது, வாக்காளர்களை கேலி செய்வதாகாதா?இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை